×

பச்சமலை பகுதியில் 250லி கள்ளச்சாராயம் கண்டுபிடித்து அழிப்பு

திருச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 52 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஒவ்வொரு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணிகளில் ஈடுபட்டு சட்டத்துக்கு புறம்பான வகையில் மது, போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் பிரதீப் குமார், எஸ்பி வருண்குமார் மற்றும் போலீஸ் படையினர் நேற்று இரவு பச்சைமலை நெசக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் ஊறல் போடுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் குழிதோண்டி புதைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நெசக்குளம் மக்களை அழைத்து கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து கலெக்டர் பிரதீப்குமார் எடுத்துக் கூறினார். தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் கலெக்டர் முன்பாக கைகளை நீட்டி, இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி நடக்காது, அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

1000 லிட்டர் சாராயம் பறிமுதல்
நாகை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு ஒரே நேரத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயிரம் லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பச்சமலை பகுதியில் 250லி கள்ளச்சாராயம் கண்டுபிடித்து அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Bachamalai ,Tamil Nadu ,Kalalakurichi ,K. Stalin ,
× RELATED தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி...