×

பிரம்மனுக்கு வேதங்கள் உபதேசித்த பெருமான்

தரிசிக்க தரிசிக்க நம்மை ஈர்க்கும் திருமுகம் கொண்ட பெருமாள், வேதங்களைப் பிரம்மனுக்கு உபதேசித்ததால் ‘வேத நாராயணப் பெருமாள்’ என்று பெயர் பெற்றார். ஆலய பட்டர், பெருமாளின் திருப்பாதங்களிலிருந்து திருமுகம் வரை நெய்தீப ஒளியினை ஆரத்தியாய் காட்டும்போது, கவலைப் படாதே நான் உனக்கு என்றும் துணையாக இருப்பேன். உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்கும் பாவனையில் காட்சியளிக்கிறார். தலைமாட்டில் தலையணையாக வேதங்களை வைத்துக்கொண்டு ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார், வேத நாராயணப் பெருமாள்.‘கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமா? நுழைவுத் தேர்வில் வெற்றிபெற வேண்டுமா? மேற்படிப்புக்கு உறுதுணை வேண்டுமா? கல்லூரியின் பேராசிரியர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள வேண்டுமா? ஒவ்வொரு வருடமும் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? கவலை வேண்டாம். இந்தப் பெருமாளைத் தரிசித்தாலே அந்த பாக்கியம் கிட்டும்.இப்பெருமாள், புராணகாலத் தொடர்புடையவர். ஆதிகாலத்தில் ‘எப்பொருளையும் படைக்கக்கூடிய சக்தி பெற்றிருக்கிறோம்’ என்று பிரம்மன் கர்வமுடனிருந்தார். இதனை அறிந்த பெருமாள், ஒரு விகாரமான உருவத்தை உருவாக்கி பிரம்மாவைப் பார்த்து வரும்படி அனுப்பினார்.பிரம்மா அந்த உருவத்தைப் பார்த்து பயந்தார். ‘படைக்கும் திறன் என்னிடம் இருக்க யார் இந்த அகோர உருவத்தைப் படைத்து இருப்பார்கள்?’ என்ற வியப்புடன், பெருமாளிடம் வந்து விவரத்தைச் சொன்னார்.

‘‘படைக்கும் தொழில் என்னுடையதுதானே.’’‘‘உன் கர்வம் அழிவதற்குத்தான் இப்படியொரு உருவை படைத்தேன்.’’ என்று அதே உருவை அழகாகவும் உருவாக்கிக் காட்டினார் பெருமாள்.கர்வம் அழிந்த பிரம்மா, ‘என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு மேன்மேலும் ஞானம் பெருக வேத உபதேசம் அருள வேண்டும்’ என்று வேண்டினார்.‘‘பிரம்மனே, உன் வேண்டுதல் இப்பொழுது நிறைவேறாது. பின்னொரு காலத்தில் பூலோகத்தில் காவேரிக் கரையின் வடகரையில் வேத நாராயணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருள்வேன். அப்போது, அங்கு வந்து என் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்கொடி) வேத உபதேசம் பெற்றுக் கொள்’’ என்று அருளினார். காலம் கடந்தது. பெருமாள், அன்று சொன்னதுபோல் காவேரிக் கரையில் வேத நாராயணராக எழுந்தருளினார். பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மன் வீற்றிருக்க, அவருக்கு வேத உபதேசம் செய்தார் பெருமாள். அதனால் இத்தலம் குரு தலமாகத் திகழ்கிறது. மேலும், வேதத்தை சிரசில் தலையணையாக வைத்துக் கொண்டிருப்பதால் புதனுக்கு அதிபதியாகவும் உள்ளார். எனவே இத்திருத்தலம் குரு, புதன் கிரகங்களின் அபிமானத் திருத்தலமாகத் திகழ்கிறது.

காவேரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தின் (திருநாராயணபுரம்) பெருமைகள் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இரணிய சம்ஹாரம் முடிந்ததும், திருமாலின் கட்டளைப்படி பிரகலாதன் சில காலம் ஆட்சி புரிந்தான். பிறகு வேத நாராயண க்ஷேத்திரத்தில் தவம் புரிந்தான். பிரகலாதனின் தவத்தைப் போற்றிய திருமால், கருடாழ்வார், ஆதிசேஷன், தேவர்களுடன் திவ்விய விமானத்தில் ஏறி காவேரியின் உத்தர தீரத்தில் கூர்ம பீடத்தில் எழுந்தருளினார். பிறகு வேத நூல்களைத் தலையணையாகக் கொண்டு, அனந்த போக சயனக் கோலத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக இங்கு நிரந்தரமாக எழுந்தருளினார் என்று அப்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருள்மிகு வேத நாராயணப் பெருமாள் கோயிலின் நுழைவு வாயிலில் காலடி எடுத்து வைக்கிறோம். எதிரே இரண்டு கொடி மரங்கள். ஒன்றை ஆதிதுவஜஸ்தம்பம் என்கிறார்கள். அந்தத் துவஜ ஸ்தம்பத்தின் அடியில் அனுமன் எழுந்தருளியுள்ளார். இவரை ‘காரிய சித்தி அனுமன்’ என்றும் கம்பத்தடி ஆஞ்சநேயர் என்றும் வணங்கி வழிபடுகின்றனர். இவரை வழிபட நினைத்த காரியம் உடனே நிறைவேறுமாம். அடுத்துள்ள கொடி மரத்தையும் தரிசிக்கிறோம். அந்தக் கொடிமரம் உயர்ந்து உள்ளதுபோல் நம் வாழ்வும் உயரும் என்பது நம்பிக்கை.

கொடிமரத்தின் எதிரே பெருமாளின் திருப்பாதங்கள் உள்ளன. திருப்பாதங்களைத் தரிசித்தபின், சற்று தலை நிமிர்ந்தால் எதிரே ராமானுஜர் நடுநாயகமாக இருக்க, அவரது வலதுபுறம் மணவாளமுனியும், இடதுபுறம் கருடாழ்வாரும் சுதை வடிவில் தரிசனம் தருகிறார்கள்.கிழக்குத் திசை நோக்கிய சந்நதி. மகாமண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபம் சென்றால், கருவறையில் வேதநாராயணப் பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் நாபிக் கமலத்திலிருக்கும் நான்முகனுக்கு உபதேசம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தருவதைத் தரிசிக்கலாம். அவரது திருவடியில் ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் திருவடி கைங்கர்யம் செய்கிறார்கள். கீழே பிரகலாதன் மூன்று வயது பாலகனாகக் காட்சி தருகிறார்.மூலவரின் அருகிலேயே உற்சவத்திருமேனிகளான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வேத நாராயணரையும் நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். பெருமாள் சந்நதிக்கு அருகில் கருடாழ்வார் சந்நதி உள்ளது. அவருக்கு அருகில் சிறிய அளவில் ஆஞ்சநேயரும் உள்ளார். இச்சந்நதியின் இடதுபுறம் தெற்கு நோக்கி சேனை முதலியார் சந்நதி உள்ளது. மூலவர் சந்நதியிலிருந்து வெளிவந்ததும் இரண்டாவது பிராகாரத்தில் தாயார், தனிச்சந்நதியில் எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியையும் அதன் அருகில் பரமபத வாசலையும் தரிசிக்கலாம்.

கோயிலை வலம் வரும்போது, வடதிசையில் வில்வ மரம் காட்சி தருகிறது. அதன் எதிரில் பலிபீடம் உள்ளது தனிச்சிறப்பு ஆகும். இங்கு எழுந்தருளியிருக்கும் வேத நாராயணப் பெருமாள் சந்நதியில் மாணவ, மாணவிகள் தங்கள் பாடப்புத்தகங்களையும், நோட்டுப் புத்தகங்களையும் அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாள் முன் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.இப்பெருமாளைத் தரிசிக்க படிப்பு வரும், பண்பு வரும், பணம் சேரும், பட்டம், பதவி கிட்டும் என்பதால், மீண்டும் மீண்டும் இங்கு மாணவ, மாணவியர்களும், பக்தர்களும் வருகை தந்து பலன் பெறுகிறார்கள். மேலும், தொழில் வியாபாரம் விருத்தியடையவும், சுபகாரியங்கள், திருமணம், குழந்தைப் பேறு கைகூடவும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வேத நாராயணப் பெருமாளைப் பிரார்த்தனை செய்தால், வெற்றி நிச்சயம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இத்திருக்கோயில் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ.தூரத்தில் உள்ளது திருநாராயணபுரம்.

 

The post பிரம்மனுக்கு வேதங்கள் உபதேசித்த பெருமான் appeared first on Dinakaran.

Tags : Brahman ,Perumal ,Veda Narayana Perumal ,Thirumugam ,
× RELATED வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து...