×

திருமயம் பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் அரசு போக்குவரத்து கழக அலுவலகம்

*நிரந்தர தீர்வு காண பயணிகள் கோரிக்கை

திருமயம் : திருமயம் பகுதி மக்களுக்கு அரசு பொது போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், சட்டமன்றத் தொகுதியின் தலைமையிடமாகவும் உள்ளது. இங்கு ஒன்றிய அலுவலகங்கள், சட்டமன்ற அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றன.

மேலும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பஸ் போக்குவரத்திற்கு முக்கிய ஊராக திருமயம் உள்ளது. இங்கு சிவகங்கை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, ராமேஸ்வரம் செல்லும் அனைத்து பஸ்களும் திருமயத்தின் வழியாகவே இயக்கப்படுகிறது.

இதனிடையே 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட போது திருமயத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை சற்றும் திருமயத்திற்கு சம்பந்தமில்லாமல் சென்ற போதிலும் அரசு, தனியார் பஸ்கள் திருமயம் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து செல்வதை அப்போதே அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் போராடி உறுதி செய்தனர்.

இந்நிலையில் காலப்போக்கில் அரசு, தனியார் பஸ்கள் திருமயம் பஸ் ஸ்டாண்டுக்கு வருவதை தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் அனைத்து பஸ்களும் திருமயம் பைபாஸ் சாலையில் செல்வதால் திருமயம் பஸ் ஸ்டாண்ட்டிற்கு பஸ் வருவதில்லை.

இதனால் இரவு நேரங்களில் பயணிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை, காரைக்குடி பஸ் ஸ்டாண்டுகளில் பஸ் ஏறும்போது திருமயம் பயணிகளை ஏற வேண்டாம் என நடத்துனர்கள் அறிவுறுத்தும் நிலையில் மீறி பஸ்சில் ஏறும் பயணிகளை நடுவழியில் இறக்கி விடுவதால் அவ்வப்போது பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனைப் போக்க அப்பகுதி மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான நடவடிக்கை இல்லை அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

பூட்டியே கிடக்கும் அரசு போக்குவரத்து கழக அலுவலகம்: திருமயம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பொது போக்குவரத்தை வழங்கி வருகிறது. திருமயம் வழியாக பெரு நகரங்கள், பொன்னமராவதி, ராயவரம், அரிமளம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருமயம் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏற திருமயம் பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.

இதனிடையே திருமயம் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறும் பயணிகளுக்கு வழிகாட்டவும், திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் வருவதை கண்காணிக்கவும் திருமயம் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வந்தது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அலுவலர்கள் யாரும் நியமிக்கப் படாததால் திருமயம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் பூட்டி கிடக்கிறது.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் செல்லும் நேரம், வருகை தெரியாமல் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே திருமயம் புறவழிச் சாலையாக உள்ள திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் செல்வதாகவும் இதனால் திருமயம் பயணிகளை பஸ்ஸில் ஏற்ற நடத்துனர்கள் மறுப்பதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருமயம் பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் போக்குவரத்து கழக அலுவலகத்தை திறந்து அலுவலர்களை நியமிப்பதன் மூலம் திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வருவதை உறுதி செய்ய முடியும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் பஸ் ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை திறந்து அலுவலரை நியமித்து பயணிகளுக்கு வழிகாட்டுவதோடு, திருமயம் வழியாக வரும் அரசு, தனியார் பஸ்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தீர்வு கிடைக்குமா?

பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை விரிவாக்க பணிகள் செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அப்படி சாலை விரிவாக்கம் செய்யும்போது ஏற்கனவே உள்ள கிராம மக்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியாக திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை 12 வருடங்களை கடந்தும் திருமயம் பகுதி மக்களை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் உள்ள மிகவும் முக்கியம் வாய்ந்த சட்டமன்ற தொகுதிகளில் திருமயம் தொகுதியும் ஒன்று.

அதேசமயம் திருமயம் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். இங்கு வாழும் மக்கள் புதிதாக பஸ் இயக்கச் சொல்லி போராடாமல் ஏற்கனவே இயக்கப்பட்ட பஸ்களை இயக்கச் சொல்லியே கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்காதது வருத்தம் அளிப்பதாக அப்பகுதி முக்கியஸ்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை சரி செய்ய நாள் தோறும் சமூக வலைதளங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் இது நாள் வரை நிரந்தர தீர்வு என்பது கிடைக்கவில்லை. அதேசமயம் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.எனவே அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post திருமயம் பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation Office ,Thirumayam Bus Stand ,Thirumayam ,Tirumayam ,Pudukottai district ,Tirumayam district ,Government Transport Corporation ,Tirumayam bus stand ,Dinakaran ,
× RELATED திருமயம் தாலுகாவில் ₹5.35 கோடியில் 3 அணை...