×

சேலம் மாநகர் முழுவதும் ₹135 கோடியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு

*மாமன்ற கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் உறுதி

சேலம் : சேலம் மாநகராட்சி முழுவதும் ரூ.135.68 கோடியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாமன்ற கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது.

மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கமிஷனர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய 44வது வார்டு கவுன்சிலர் இமயவர்மன், `ஒன்றிய அரசின் 3 சட்ட திருத்தத்தை எதிர்த்து, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தினார். 32வது வார்டு கவுன்சிலர் பௌமிகா தப்ஷீரா பேசும்போது, பட்ைடகோயில் முதல் டவுன் போலீஸ் ஸ்டேசன் வரை, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பழக்கடை மற்றும் காய்கறிகடைகளை அகற்ற வேண்டும், என்றார்.

43வது வார்டு கவுன்சிலர் குணசேகரன், மாநகராட்சியில் மக்கள் தொகை அடிப்படையிலும், பரப்பளவு அடிப்படையிலும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதுடன், தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார். 9வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்ற திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். 57வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் பேசுகையில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்ய வேண்டும், என்றார். 56வது வார்டு கவுன்சிலர் சரவணன் `சிறு, குறு தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட தொழில்துறையினருக்கு ஏற்கனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட பல வரிகள் உள்ளன.

தற்போது மாநகராட்சியும் வரி விதிப்பதால், வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை தவிர்க்க வேண்டும். அதேசமயம் மாநகராட்சி நிதி நெருக்கடியை சமாளிக்க, தனிக்குழு அமைத்து நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க வேண்டும், என்றார். 60வது வார்டு கவுன்சிலர் வரதராஜ், குறிஞ்சி நகர் ஓடையை அகலப்படுத்துவடன், சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார். மண்டல குழு தலைவர் அசோகன் பேசும்போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஏற்படும் மழை பாதிப்புகளை தவிர்க்க, தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி ஆகியவை இணைந்து ஆலோசித்து, நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

37வது வார்டு கவுன்சிலர் திருஞானம், அம்மாபேட்டை பல்நோக்கு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை நியமித்து, முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என்றார். 55வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, குடிநீர் வினியோகம் முறையாக இருப்பதில்லை. சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

34வது வார்டு கவுன்சிலர் ஈசன் இளங்கோ, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், உணவு பொருட்களை சாக்கடையில் கொட்டுவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என கோரிக்கை விடுத்தார். 58வது வார்டு கவுன்சிலர் கோபால், அம்பாள் ஏரி பாழடைந்துள்ளது. சாக்கடை நீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீரமைக்க வேண்டும், என்றார்.
51வது வார்டு கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி, வார்டில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை திறக்க வேண்டும். மணியனூர் அரசுப்பள்ளியின் சுற்றுசுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

41வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி, மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர், என்றார். இதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் பாலச்சந்தர் ‘‘நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மாதத்திற்கு 100 ஆக இருந்தது, தற்போது 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 2 இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது, என்றார்.

மேயர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘மாநகரில் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சாக்கடை கால்வாய் சீரமைப்பதற்காக ₹135.68 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மாநகர் முழுவதும் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படும்,’’ என்றார்.

முதல்முறையாக தமிழ்தாய் வாழ்த்து

சேலம் மாநகராட்சி கூட்டம் எப்போதும் திருக்குறளுடன் தொடங்கப்படுவது வழக்கம். இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ஈசன்இளங்கோ வலியுறுத்தி இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற மேயர், கமிஷனர் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தை தொடங்கினர்.

அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், `தாதம்பட்டி ஏரிக்கு பொதுமக்கள் செல்லும் வழியை சீரமைக்க வேண்டும். புது பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்ட், கழிப்பறைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும்,’ என்றார். பின்னர், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து, அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post சேலம் மாநகர் முழுவதும் ₹135 கோடியில் சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Municipality ,MAYOR ,RAMACHANDRAN ,SALEM ,Salem Municipal ,Council ,Dinakaran ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...