×

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் கேரட், பீட்ரூட் வீரிய ரக விதைகள் விநியோகம்

*விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

ஊட்டி : தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிலும் வீரிய ரக கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற விதைகள் வழங்கப்பட உள்ளது என ஊட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கடந்த 3 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதியுடன் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பின் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தலைமை வகித்தார். உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தெரிவிக்க கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் அருணா பேசியதாவது: 2023-24ம் ஆண்டில் 3 மாவட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் 12 வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு வருவாய் கிராமத்திற்கு ஒரு விவசாய நண்பர் வீதம் 27 விவசாய நண்பர்கள் உள்ளனர்.

தோட்டக்கலைத்துறை மூலம் வீரிய ரக கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு ஆண்டிலும் வீரியரக விதைகள் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து திட்டங்களும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படியே செயல்படுத்தப்படுகிறது.

பந்தல், பண்ணை குட்டை, பசுமைக்குடில்,நிழல்வலை குடில்,சிப்பம் கட்டும் அறை,குளிர்பதன கிடங்கு, குளிர்பதன வாகனம், பரப்பு விரிவாக்கம், பூண்டு,இஞ்சி மற்றும் ஸ்ட்ராபெரி, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, காளான் வளர்ப்பு கூடம்,கார்னேசன்,லில்லியம்,முன்குளிர்வூட்டும் அறை,மண்புழு உரக்கூடாரம் போன்ற இனங்கள் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலும் வழங்கப்பட உள்ளது.

தோட்டக்கலைத்துறை மூலம் 2023-24ம் ஆண்டில் கூடலூர் மற்றும் குன்னூர் வட்டாரத்தில் 3.79 ஹெக்டர் பரப்பு பயிர் சேதத்திற்கு (நெல் உட்பட) ரூ.64 ஆயிரத்து 430 நிவாரண நிதி கோரி அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 4.95 ஏக்கர் பரப்பிற்கு ரூ.86 ஆயிரத்து 550 மாநில பேரிடர் நிவாரண நிதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

கூடலூரில் நடப்பு ஆண்டில் நோய் தாக்குதலால் பாகற்காய் பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு வீரிய ரக காய்கறி விதைகள் மானியத்தில் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
நடப்பு ஆண்டில் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டும் டீசல் அல்லது மின் மோட்டார் (50 சதவீத மானியம், ரூ.15 ஆயிரம்) வழங்க ரூ.5 லட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது, என்றார்.

The post தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் கேரட், பீட்ரூட் வீரிய ரக விதைகள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Grievance Meeting ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...