×

ஊட்டி – கோத்தகிரி சாலையில் மண்சரிவை தடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

*6 இடங்களில் மண் ஆணி அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன் மண்சரிவை தடுத்தல் – மண் ஆணிப் பொருத்தும் பணியினை கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையானது ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பகுதி வழியாக செல்கிறது.

மேலும், நமது மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த சாலையின் வழியாக பயணிக்கின்றனர்.
இந்த மலைப்பாதையில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்படுகிறது. மேலும், நிலச்சரிவு மற்றும் மண்சரிவுகளை தடுக்க தடுப்புச்சுவர் மற்றும் மார்பு சுவர் அமைக்கப்படுகிறது.

இருந்த போதிலும் பருவநிலை மாற்றம் மற்றும் மழையின் காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுகிறது.இதனால் தடுப்புச்சுவர் மற்றும் மார்பு சுவர் அமைப்பதன் மூலம் முழுமையான தீர்வு காண முடிவதில்லை. எனவே, இச்சாலையில் மண் உறுதிப்படுத்தல் மற்றும் மண்சரிவை தடுப்பதற்காக, நவீன தொழில் நுட்பத்துடன் செயல்படுத்துவது இன்றியமையாது என்பதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டமான மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக் காக்கும் மண் ஆணி பொருத்தும் திட்டத்தின் கீழ் ஊட்டி – கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலை கோடப்பமந்து பகுதியில், பரிட்சார்த்த முறையில், நவீன தொழில் நுட்பத்துடன் மண்சரிவை தடுத்தல் – மண் ஆணிப் பொருத்தும் முறையினை அமைச்சர் வேலு தொடங்கி வைத்தார்.

நமது மாவட்டத்தில்,மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத்தடுத்து நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் மூலம் மண்ணின் உறுதித் தன்மையை அதிகரித்து, ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்க்கும் முறையானது, மலைப்பகுதியின் மேற்பரப்பைத் தயார்ப்படுத்துதல், மலையின் மேற்பரப்பின் சாய்வுதளத்தை வலுப்படுத்த மண் ஆணி அமைத்தல், மண் அரிப்பைத் தடுக்க ஹைட்ரோ சீடிங் எனப்படும் நீர் விதைப்பு முறையை மேற்கொள்ளுதல், மண் வலிமை உறுதி செய்து, சரிவைத் தடுக்க ஜியோ கிரிட் மூலம் மண் உறுதித்தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டுதல், பின்னர் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளுதல் என பல்வேறு நிலைகளை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், மக்களைக் காக்கும் மண் ஆணி திட்டமானது ஊட்டி – எமரால்டு சாலை இத்தலார் பகுதியில் ஒரு இடத்திலும்,எல்லநள்ளி – கெந்தளா சாலையில் கேத்தி பாலாடா பகுதியில் 2 இடங்களிலும், ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் 2 இடங்களிலும்,மடித்துரை பகுதியில் ஒரு இடத்திலும், பாக்யா நகர் பகுதியில் ஒரு இடத்திலும், குன்னூர் – கோத்தகிரி சாலையில் பெட்டட்டி பகுதியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 8 இடங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்பத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் ஒரு இடத்திலும் மற்றும் பாக்கியா நகர் பகுதியிலும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 6 இடங்களில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் நீலகிரி வாழ் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகப் பொருள்கள் மலைப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வோர்களுக்கும்,காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை சமவெளிப் பகுதிகளுக்குச் கொண்டு செல்வோர்க்கும் பெரிதும் பயன்படும்.

எல்லாவற்றையும் விட மனித உயிழப்புகளையும் வனவிலங்குகள் உயிரிழப்பையும் தடுத்து நிறுத்த மிகவும் முக்கியமாகப் பயன்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செல்வம்,உதவி கோட்டப்பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் ஸ்டாலின், சாலை ஆய்வாளர் பிரகாஷ் உட்பட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஊட்டி – கோத்தகிரி சாலையில் மண்சரிவை தடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty – Kotagiri road ,Ooty ,Nilgiri district ,Highways Department ,Kodappamandu ,Ooty-Kothagiri road ,
× RELATED ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை...