×

தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம்

தூத்துக்குடி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய மாணவர்படை சார்பில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் என்.சி.சி. கமாண்டிங் அலுவலர் பிரதோஷ் தலைமை வகித்தார். ஜெயபிரியா யோகா பயிற்சிளித்தார். இதில், சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், பத்மாசனம் உள்ளிட்ட 60 ஆசனங்கள் செய்யப்பட்டது. இதில், காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, ஏபிசி மகாலட்சுமி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி, கல்லூரியைச்சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு யோக பயிற்சி செய்தனர்.

தூத்துக்குடி அஞ்சல் துறை சார்பில் முத்துநகர் கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தலைமை வகித்தார். யோகா ஆசிரியர் பாலமுருகன் யோகா பயிற்சி அளித்தார். இதில் வேதாத்திரி மகரிஷி எளிய முறை குண்டலினி யோகம் கற்று கொடுக்கப்பட்டது. இதில் அஞ்சல்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பள்ளி தாளாளரும், முதல்வருமான ஜெயாசண்முகம் தலைமை வகித்தார். சேவாபாரதி யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் யோகாவின் சிறப்பு பலன்களையும், பாரம்பரிய உணவுமுறை பற்றியும் எடுத்துக் கூறினார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சூரியநமஸ்காரம் தொடங்கி பல ஆசனங்கள் செயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பிரியங்கா நன்றி கூறினார்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை வகித்தார். ஐம்புலன் யோகாகலை குரு பார்த்தசாரதி தற்போதைய வாழ்க்கை முறைக்கு தேவையான யோகாசனங்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். உதவி உடற்கல்வி இயக்குநர் நடராஜன் நன்றி கூறினார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் துறைமுக கூட்டரங்கில் சர்வதேச யோகா தினம் தனிமனித மற்றும் சமூக நலனில் யோகாவின் பங்கு என்னும் கருப்பொருளில் நடைபெற்றது. இதில், வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசந்தகுமார் புரோகித் தலைமை வகித்து, தினசரி வாழ்க்கையில் யோகாவை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து உடல் மற்றும் மனநல மேம்பாடு பெற்று தனி மனித செயல்திறன் அதிகரிக்கும் என்றார். வ.உ.சி.துறைமுக துணைத்தலைவர் (பொ) சுரேஷ்பாபு முன்னிலை வகித்து துறைமுகப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

துறைமுக செயலர் (பொ) வித்யா தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வரவேற்று பேசினார். வாழும் கலை குழுமத்தைச் சார்ந்த யோகா பயிற்சியாளர் சங்கரநாராயணன், தர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று இந்த ஆண்டின் கருப்பொருள் குறித்து விளக்கி, பிராணயாமம், தியானம் மற்றும் யோகாசனங்களின் செயல்முறை விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் துறைமுகப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் துறைமுகத்தில் உள்ள கப்பல் தளத்தில் துறைமுகத்தின் இழுவைக் கப்பல் பணியாளர்கள், துறைமுக தீயணைப்பு வீரர்கள் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டனர். தக்ஸன் பாரத் கேட்வே பணியாளர்கள் தங்களது சரக்கு பெட்டக முனையத்தில் யோகா செயல் விளக்கங்கள் செய்து காட்டினார்.

கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை 9-தமிழ்நாடு சைகை கம்பெனி சார்பில் கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவில்பட்டி மன வள கலை மன்ற யோகா மாஸ்டர் சரமாரிராஜ் மற்றும் கல்லூரி யோகா கிளப் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்னணு தொடர்பு பொறியியல் துறைத்தலைவர் பேராசிரியர் தமிழ்செல்வி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கல்லூரி என்.சி.சி. அதிகாரி மேஜர் பிரகாஷ் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை மீது முன்னாள் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சுப்பாராஜு யோகாசன செய்முறை பயிற்சியில் ஈடுபட்டு செய்து காட்டினார். கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நடுவர் எண் 1 நீதிபதி கடற்கரை செல்வம், குற்றவியல் நடுவர் எண்2 நீதிபதி பீட்டர், விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

எட்டயபுரம்: எட்டயபுரம் பாரதியார் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் நடந்தது. எட்டயபுரம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் நடந்த யோகாசன பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை வகித்தார். எட்டயபுரம் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் மகேஸ்வரி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கி நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் யோகா பயிற்சி மற்றும் அதன் பலன்கள் குறித்து பேசினார். ஆசிரியை அனுசுயா நன்றி கூறினார்.

குளத்தூர்: குளத்தூர் இந்துநாடார் நடுநிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் மரியராஜசெல்வி தலைமை வகித்து பேசினார். ஆசிரியர் அந்தோணிராஜ், ஆசிரியை நீதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் செந்தில்குமரன் யோகா பயிற்சியின் நலன்கள் குறித்து பேசினார். தொடர்ந்து யோகா பயிற்சி ஆசிரியர் கனகாம்பரம் மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளை அளித்தார். ஆசிரியர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்.

ஏரல்: ஏரல் லோபா மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோக தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை செல்வகுமார் வரவேற்றார். பள்ளி நிறுவனர் லோபா முருகன் யோகாவை பற்றி, அதன் படிநிலைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர் ஒவ்வொரு ஆசனங்களையும் செய்துகாட்ட அதனை அனைத்து மாணவ, மாணவிகளும், ஆசிரியைகள் புவனேஸ்வரி, அஜிதா, பாலநித்யா மற்றும் காய்த்ரி ஆகியோர்கள் செய்தனர். விழா முடிவில் ஆசிரியை வடிவு வசந்தா நன்றி கூறினார்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் appeared first on Dinakaran.

Tags : International Yoga Day ,Tuticorin District ,Thoothukudi ,N. C. C. ,Commanding ,Pradosh ,Jayapiriya ,Namaskaram ,Padmasanam ,Dinakaran ,
× RELATED ராணுவ பணியாளர்களுக்கு யோகா, தியான பயிற்சி