- திருச்செந்தூர் முருகன் கோயில்
- திருச்செந்தூர்
- சபாபதிபுரம் தெரு
- திருச்சேந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
*பள்ளி செல்லும் குழந்தைகள் பரிதவிப்பு
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள சபாபதிபுரம் தெருவில் அடிக்கடி கடும் போக்குவரத்து ஏற்பட்டு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. இதனால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் அழகிய கடற்கரையோரம் குடிகொண்டுள்ள இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இதனால் திருச்செந்தூர் என்றாலே திருவிழாவும், பக்தர்களும் கூட்டமும் தான் நினைவுக்கு வரும். அதிலும் தற்போது வீடு தோறும் வாகனம் என்ற நவீன யுக வளர்ச்சியின் காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து மற்றும் ரயில் பயணத்தை விட கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவதே அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கடற்கரைப்பகுதி வரை செல்ல முடிவதால் கார்களில் வருவதையே விரும்புகின்றனர்.
ஆனால் கோயிலில் தற்போது ரூபாய் 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதால் கோயிலின் நாழிக்கிணறு பேருந்து நிலையம் ஆனது அரசு பேருந்துகள் நிற்க கூட இடமில்லாமல் பணிகளால் சுருங்கிவிட்டது. எனவே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களும், பேருந்துகளும் மட்டுமே அங்கே நிறுத்தப்படுகிறது. மற்ற வாகனங்கள் டிபி ரோட்டில் உள்ள வாகன நிறுத்தம் மற்றும் நகரின் எல்லையிலே நிறுத்தப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு நடந்தே செல்கின்றனர்.
அவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் திருச்செந்தூர் ரதவீதியை கடந்து சபாபதிபுரம் தெரு வழியாக நாழிக்கிணறு பேருந்து நிலையத்தை அடைவதற்குள் பெரிய அளவிலான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் நாள்தோறும் காலை வேளையில் 8 மணி முதல் 10 மணிக்குள் பள்ளி செல்லும் வாகனங்களும், அரசு பேருந்துகளும், பக்தர்களின் வாகனங்களும் குறுகலான சபாபதிபுரம் தெருவில் எதிரெதிரே வருவதால் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
நாள்தோறும் காலை 9 மணிக்கு போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் அதற்குள் சுமார் ஒரு மணி நேரம் சபாபதிபுரம் தெருவில் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத அளவில் வாகன நெரிசலில் படாதபாடுபடுகிறது. இதனால் பக்தர்கள், குடியிருப்புவாசிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சபாபதிபுரம் தெருவில் இருந்து நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரை வாகன போக்குவரத்தை போலீசார் முழுமையான அளவில் கண்காணித்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பள்ளி குழந்தைகள் பாவம்
தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரித்துள்ளதால் நாள்தோறும் 5 வயது குழந்தைகள் கூட அதிகாலையில் எழுந்து வேக வேகமாக பள்ளிக்கு புறப்பட்டு காத்திருந்து பேருந்தில் ஏறி போக்குவரத்து நெருக்கடியில் நீண்ட நேரத்திற்கு பிறகு பள்ளி செல்வதற்குள் வகுப்புகள் துவங்கி விடுகின்றன.இதனால் அதிகாலை எழுந்த சோர்வால் போக்குவரத்து நெருக்கடியில் காத்திருக்கும் நேரத்தில் பேருந்திலேயே குழந்தைகள் தூங்கி முழித்து விடுகின்றனர்.
The post திருச்செந்தூர் முருகன் கோயில் செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.