×

ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி அறுத்து மாந்திரீகம்: காவலாளி மீது நடவடிக்கை; மர்ம நபர்களுக்கு வலை

பெரம்பூர்: ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி ஆகியவற்றை அறுத்து மாந்திரீகம் செய்த மர்ம நபர்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பணம் வாங்கிக்கொண்டு அவர்களை சுடுகாட்டிற்குள் செல்ல அனுமதித்த அளித்த காவலாளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பி-பிளாக் மெயின் தெருவில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம் (82). இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10ம் தேதி இறந்தார். இவரை ஓட்டேரி சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில், 16ம் நாள் காரியம் செய்வதற்காக கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காலை ஓட்டேரி சுடுகாட்டிற்கு வந்தனர். அப்போது, ஜோதிலட்சுமி புதைக்கப்பட்ட இடத்திற்கு மேல் கோழி, பன்றி, ஆகியவற்றை அறுத்து வாழை இலையில் வைக்கப்பட்டும், மண்பாண்டத்தில் முட்டை, தேங்காய் வைத்தும் யாரோ சிலர் மாந்திரீகம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில், தலைமைச் செயலக காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணி அளவில் காரில் வந்த 5 பேர், ஓட்டேரி சுடுகாட்டில் பன்றி, கோழி ஆகியவற்றை அறுத்து மாந்திரீகம் செய்ததும், இதற்கு சுடுகாட்டில் காவலாளியாக வேலை செய்யும் புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (56) மற்றும் வெட்டியான் ராஜேஷ் (38) ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, தாமோதரனை பிடித்து விசாரித்தனர். அதில், பரிகார பூஜை செய்ய வேண்டும், என நள்ளிரவு காரில் வந்த 5 நபரிடம், இவர் ரூ.5000 பெற்றுக் கொண்டு, சுடுகாட்டுக்குள் அனுமதித்ததும், அவர்கள் பன்றி, கோழி ஆகியவற்றை அறுத்து பூஜை செய்துவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதற்கு வெட்டியான் ராஜேஷ் என்பவர் உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது. காவலாளி தாமோதரன் சென்னை மாநகராட்சியில் பணிபுரிவதால் அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மாந்திரீகம் செய்ய வந்தவர்கள் யார் என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி அறுத்து மாந்திரீகம்: காவலாளி மீது நடவடிக்கை; மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Otteri crematorium ,Perambur ,Oteri crematorium ,Web for ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது