×

இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது

பெரம்பூர்: இன்ஸ்டாகிராமில், துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். வட சென்னையில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கத்தி மற்றும் துப்பாக்கிகளை வைத்து ரீல்ஸ் போடுவதும், தங்களது மொபைலில் அதனை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அந்த வகையில் வியாசர்பாடி கென்னடி நகர் 3வது தெருவை சேர்ந்த சஞ்சய் (22) என்பவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்து ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், ரவுடிகள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சஞ்சயை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மரத்தால் செய்யப்பட்ட இரண்டு கத்தி, பிளாஸ்டிக் துப்பாக்கியை வைத்து கெத்துக்காக, ரீல்ஸ் வெளியிட்டது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதால் அவரை வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, தொடர்ந்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்ட சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் தந்தை ராதாகிருஷ்ணன் (எ) கிஷ்டா என்பவரை கடந்த 2010ம் ஆண்டு பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது ஆட்கள் வெட்டி கொலை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,North Chennai ,WhatsApp ,
× RELATED பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடல்