×

பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதிமல்லி, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால் சென்னை உள்பட பல்வேறு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

கடந்த வாரத்தில் பூக்கள் விலை குறைந்து விற்பனையானது. ஒரு கிலோ மல்லி ரூ.350, ஜாதிமல்லி, முல்லை ரூ.250, கனகாம்பரம் ரூ.600, அரளி ரூ.100, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.70, சாக்லேட் ரோஸ் ரூ.80 என விலை குறைந்து விற்பனையானது. இந்நிலையில், பவுர்ணமியையொட்டி நேற்று அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ.800, ஜாதிமல்லி, முல்லை ரூ.400, அரளி ரூ.180, சாமந்தி ரூ.260, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.70 என விலை உயர்ந்தது. அதிகாலை முதலே சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பூக்களை வாங்க கோயம்பேடு பூ மார்க்கெட்டில் குவிந்தனர். பூக்கள் விலை உயர்ந்த நிலையில், வியாபாரம் அமோகமாக நடந்தது. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் அனைத்து பூக்களின் விலையும் குறைந்த நிலையில், நேற்று பவுர்ணமியையொட்டி மீண்டும் விலை உயர்ந்தது. விவசாயிகள் கொண்டு வந்த பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது. அதேநேரத்தில், பூக்கள் வியாபாரமும் அமோகமாக நடந்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்’’ என்றார்.

The post பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Chengalpattu ,Tiruvallur ,Kanchipuram ,Ranipet ,southern ,Malli ,Mullai ,Kanakambaram ,Jathimalli ,Sambangi ,Samanthi ,Kozhikondai ,
× RELATED கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை...