×

நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 8 முறை பிரசாரம் செய்தும் மோடி பேச்சு எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தண்டையார்பேட்டை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை வடக்கு மாவட்ட திமுக ராயபுரம் கிழக்கு பகுதி 49அ வட்டம் சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் நடந்தது. வட்டச் செயலாளர் காட்டன் சதீஷ்குமார் தலைமை வகித்தார். ராயபுரம் பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பெ.சுரேஷ் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து, அவர் பேசியதாவது: கலைஞர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். முதன்முதலில் பெண் காவலரை நியமித்தது கலைஞர்தான். அவர் இறந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காமல் எடப்பாடி அரசு மறுத்தது. இதற்கு திமுக சார்பில் சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த இடத்தை பெற்றோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் 40க்கு 40 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. மோடி 8 முறை தேர்தலின்போது வந்து வாக்கு சேகரித்தார். இருந்தபோதும் அவருடைய பேச்சு தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழக மக்கள் பாஜ அரசு குறித்து நன்கு அறிந்து உள்ளார்கள்.

இந்த தேர்தலில் பெண்களின் நூற்றுக்கு 70 சதவீதம் திமுகவிற்கு வாக்களித்து உள்ளார்கள். அது மேலும் உயரக்கூடும். கள்ளச்சாராய சம்பவத்தில் அதிகாரிகள் செய்த தவறால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவம் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். தவறு யார் செய்தாலும் இந்த அரசு அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதற்கு இதுவே உதாரணம். அண்ணாமலை வாய்க்கு வந்தபடி கூறி வருகிறார். விஷ சாராய சம்பவத்தில் தமிழக முதல்வரை பதவி விலக கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

இதே பாஜ ஆட்சியில் எத்தனையோ சம்பவங்கள் நடந்து உள்ளது. அதற்கு பதவி விலகி உள்ளார்களா, உதாரணத்திற்கு சமீபத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதற்கு பிரதமர், ரயில்வே அமைச்சர் பதவி விலகினார்களா, ஆனால் கள்ளச்சாராய விஷயத்தில் தமிழக முதல்வரை பதவி விலக கூறுவது சரியா, அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயமா, தற்போது தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன், மாவட்ட, பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 8 முறை பிரசாரம் செய்தும் மோடி பேச்சு எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,RS Bharati ,Thandaiyarpet ,Chennai North District ,DMK Rayapuram East Zone 49A Circle ,Vannarappet ,Circle ,Kattan Satishkumar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...