×

அதிக முறை தேர்வான எம்பிக்குத்தான் வாய்ப்பு தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நடைமுறையை மீறியதா பா.ஜ? 8 முறை வென்றவரை தேர்வு செய்யாதது ஏன்? காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நடைமுறையை பா.ஜ மீறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. 18வது மக்களவை தேர்தல் முடிந்தபிறகு வரும் திங்கட்கிழமை முதல்முறையாக அவை கூட உள்ளது. புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த முறை தலித் தலைவரும், கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக இருந்தவருமான கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ அரசு அவரை நியமிக்கவில்லை.

பா.ஜ தலைவரும், 7 முறை எம்.பி.யுமான பர்த்ருஹரி மஹ்தாப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்து விட்டனர். தற்காலிக சபாநாயகர் என்பவர் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும் சபாநாயகர் தேர்தலை நடத்துவார். 2 நாட்கள் மட்டுமே அவரது பதவி இருக்கும். அதன்பிறகு ஜூன் 26ல் புதிய சபாநாயகர் தேர்தல் நடக்கும். ஆனால் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பெயர் அறிக்கப்படாததால் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில்,’ இது ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைகளை அழிக்கும் முயற்சி. 7 முறை எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப்பிற்கு பதில் 8 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கே.சுரேஷ் ஏன் நியமிக்கப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில்,’நான் மிகுந்த வருத்தத்துடன் அதைச் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி இப்படிப் பேசுவதற்காக வெட்கப்படுகிறேன். இந்த மக்களவை கூட்டத்தொடர் நல்ல மனநிலையுடன் தொடங்கும் என்று நான் நம்பினேன். ஆனால் தற்காலிக சபாநாயகர் தொடர்பாக காங்கிரஸ் புதிய பிரச்சினையை உருவாக்கி உள்ளது. மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் பல தவறான செயல்களை காங்கிரஸ் செய்து வருகிறது. தற்காலிக சபாநாயகரை நியமனம் விதிகளின்படிதான் நடந்தது. இதில் காங்கிரஸ் அரசியல் செய்யக் கூடாது’ என்றார்.

The post அதிக முறை தேர்வான எம்பிக்குத்தான் வாய்ப்பு தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நடைமுறையை மீறியதா பா.ஜ? 8 முறை வென்றவரை தேர்வு செய்யாதது ஏன்? காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress party ,New Delhi ,Congress ,18th Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...