சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நீர்வளம், இயற்கை வள துறை மானியக் ேகாரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: சென்னையை பொறுத்தவரையில் வெள்ளத்தடுப்பு பணியில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளோம். 2022-23 நிதியாண்டில் ரூ.434 கோடியில் 9 பணிகள் எடுத்துக்கொண்டு சீராக முடிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டில் ரூ.231 கோடியில் 4 பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.350 கோடியில் 21 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 60 சதவீதம் முடிந்துள்ளது. ரூ.96.5 கோடியில் ஒரு பணி எடுத்துக்கொள்ளப்பட்டு 30 சதவீதம் முடிந்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சீராக செய்யப்பட்டதன் விளைவாக பெரும் மழை கொட்டிய நேரங்களிலும் வெள்ள நீர் விரைவாக வடிந்தது. இந்தாண்டும் ரூ.30.5 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளை பொறுத்தவரையில் இந்தாண்டும் ரூ.110 கோடியில் 5,338 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 30ம் தேதிக்குள் முழு பணியும் முடிவடையும். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 2018ல் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை திருத்திய மதிப்பீடு செய்து ரூ.1,767 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. இப்போது தண்ணீரை கொண்டு செல்லலாம். காளிங்கராயனிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் காளிங்கராயன், பவானி ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆகையால் தண்ணீர் வந்ததும் அத்திக்கடவு விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். விவசாயப் பயன்பாட்டிற்கும், மண் பானைத் தொழில் செய்வதற்கும், மண், வண்டல் மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எளியமுறையில் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
The post சென்னையில் ரூ.350 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தீவிரம்: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.