×
Saravana Stores

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 7 முறை வடம் அறுந்ததால் பரபரப்பு

நெல்லை: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் 518வது ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. 7 முறை தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் 518வது ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேரோட்ம் நடந்தது. நெல்லையப்பர் தேரை காலை 6.30 மணி முதல் 7.46 மணிக்குள் வடம் பிடித்து இழுக்க திட்டமிடப்பட்டிருந்தது. காலை 7.20 மணி அளவில் சுவாமி நெல்லையப்பர் தேரை முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது தேரின் வடங்கள் திடீரென்று அறுந்து விழுந்தன. கோயில் நிர்வாகம் சார்பில் உடனடியாக புதிய வடம் கொண்டு வரப்பட்டு அறுந்த வடங்களுக்கு பதிலாக கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து காலை 8.18 மணியளவில் மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் சில அடிகள் நகர்ந்ததும் மீண்டும் 2வது முறையாக வடம் அறுந்தது. தொடர்ந்து மற்றொரு புதிய வடம் கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டு காலை 8.32 மணிக்கு தேர் புறப்பட்டது.

10 அடி தூரம் மட்டுமே தேர் சென்ற நிலையில் மீண்டும் வடம் அறுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், 7 முறை வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு வடத்திற்கு பதிலாக இரும்பு சங்கிலியை கோர்த்து தேரை இழுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 4 வடங்கள் கொண்ட தேரில் 2 வடங்களும், ஒரு இரும்பு சங்கிலியும் கோர்க்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. இரும்பு சங்கிலி நீளமாக இல்லாததால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கைகளைக் கோர்த்து தேரை இழுத்தனர். இதனால் நெல்லையப்பர் தேர் மிகவும் மெதுவாக நகர்ந்தது. 11.30 மணி அளவில் சந்திப்பிள்ளையார் கோயில் திருப்பத்திற்கு முன்பாக வந்தபோது திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து மற்றொரு வடம் பொருத்தப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை தேர் அந்த இடத்திலேயே நின்றது. பின்னர் 3 வடங்கள் பொருத்தப்பட்டதால் ஓரளவு சுலபமாக தேர் நகர்ந்தது. பிற்பகல் 1 மணியளவில் தேர் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டதும், பக்தர்கள் மதிய உணவிற்காக புறப்பட்டுச் சென்றனர்.

The post நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 7 முறை வடம் அறுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nellaiappar Temple ,Chariot Kolakalam ,Nellai ,Nellaiappar ,Gandhimati Ambal Temple ,procession ,Nellaiyapar ,Temple ,Tamil Nadu ,
× RELATED கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண்கலெக்டர் அலுவலகம் முன் 3 குழந்தைகளுடன் தர்ணா