×
Saravana Stores

ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை தடுக்கும் மண் ஆணி பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊட்டி -கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன் மண்சரிவை தடுத்தல், மண் ஆணி பொருத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பருவ மழையின்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் ஏற்படும் மண் சரிவை தடுக்க தமிழக முதல்வரின் திட்டமான மலைச்சரிவுகளை தடுத்து மக்களை காக்கும் மண் ஆணி பொருத்தும் திட்டத்தின் கீழ் ஊட்டி- எமரால்டு சாலை இத்தலார் பகுதியில் ஒரு இடத்திலும், எல்லநள்ளி- கெந்தளா சாலையில் கேத்தி, பாலாடா பகுதியில் 2 இடங்களிலும், ஊட்டி- கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் 2 இடங்களிலும், மடித்துரை பகுதியில் ஒரு இடத்திலும், பாக்யா நகர் பகுதியில் ஒரு இடத்திலும், குன்னூர்- கோத்தகிரி சாலையில் பெட்டட்டி பகுதியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 8 இடங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்பத்துடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஊட்டி-கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் ஒரு இடத்திலும் மற்றும் பாக்கியா நகர் பகுதியிலும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 6 இடங்களில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நீலகிரியில் வசிக்கும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தகப் பொருள்கள் மலைப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வோர், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை சமவெளி பகுதிகளுக்கு கொண்டு செல்வோர் பயனடைவர். இது எல்லாவற்றையும் விட மனித உயிழப்பு மற்றும் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க முடியும். இவ்வாறு கூறினார். ஆய்வின் போது, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், உதவி கோட்ட பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் ஸ்டாலின், சாலை ஆய்வாளர் பிரகாஷ் உட்பட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை தடுக்கும் மண் ஆணி பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty- Kotagiri Road ,Ooty ,District Collector ,Aruna Stiril ,Kodapamandu ,Ooty — Kotagiri Road ,Neelgiri ,Dinakaran ,
× RELATED கால்நடை வளர்க்கும் பகுதியாக மாறிய ஊட்டி நகராட்சி பூங்கா