×

பெண் தொழில்முனைவோர்களை வழிநடத்தும் பிஸ் லேடி!

நன்றி குங்குமம் தோழி

நான் ஒரு தொழில் செய்கிறேன். ஆனால் அந்தத் தொழிலை எப்படி வெற்றிகரமாய் செய்வது? வாடிக்கையாளர்களை எவ்வாறு அணுகுவது? விற்பனையை எப்படி அதிகரிப்பது? லாபத்தை நோக்கி தொழிலை எவ்வாறு கொண்டு செல்வது? என்கிற பல்வேறு சந்தேகங்களோடு தயங்கி நிற்கும் பெண்களை, அந்த இடத்தில் நின்று நம்பிக்கையோடு கை கொடுப்பவர்தான் ‘த பிஸ் லேடி’(The Biz Lady) விக்னேஸ்வரி கண்ணா. சுருக்கமாய் பெண் தொழில்முனைவோர் இவரை அழைப்பது வி.கே. இவரின் ‘பிஸ் லேடி’ பிஸினஸ் வகுப்பு குறித்து பேசியதில்…

‘‘ஒரு மொழியை முறையாகக் கற்று கட்டுரை எழுதுபவருக்கும், மொழி குறித்த புரிதல் இல்லாலே எழுதுபவர்களுக்கும் உள்ள வேறுபாடுதான் என்னுடைய பிஸ் லேடி பிஸினஸ் வகுப்பு. கடந்த இரண்டு வருடங்களாகவே பெண் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைத்து அவர்களை தொழிலில் முன்னேற்றுகிற வழிகாட்டியாய் செயல்படுகிறேன்.

இது ஒரு ஆன்லைன் பயிற்சி. ஏற்கனவே தொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்ய வர நினைக்கிற பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் பயிற்சியில் இருக்கிறார்கள். இதுவரை 3000த்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளனர். சின்னச் சின்ன கிராமங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்தெல்லாம் பெண்கள் வகுப்பில் இணைகிறார்கள். காலையில் தியானம், புத்தக வாசிப்பு, கலந்துரையாடல் போன்ற விஷயங்களையும் ஊக்குவிக்கிறேன்.

வருடத்திற்கு இரண்டு முறை அனைவரும் நேரில் சந்திப்போம். வெற்றி பெற வேண்டும் எனில் பெரிய பெரிய சாதனையாளர்களைத் தேடி படிக்க வேண்டும் என்பதில்லை. உங்களைச் சுற்றி இருக்கும் சின்னச் சின்ன பெண் தொழில் முனைவோர்களின் வெற்றிக் கதைகளைத் தெரிந்து கொண்டாலே நம்பிக்கை கிடைக்கும்’’ என்றவர், ‘‘வெற்றி பெற்ற தொழில்முனைவோர் அவர்களின் வெற்றிக் கதைகளை அவ்வப்போது வகுப்பில் பகிர்வார்கள்’’ என்கிறார்.

பெண்கள் ஹைலீ பவர்ஃபுல்லானவர்கள். ஆனால் தங்களிடம் அப்படியான பவர் இருப்பதே தெரியாமல் வலம் வருவார்கள். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்ல முடியவில்லை என்பதால் வீட்டில் இருந்தே தொழில் செய்ய நினைக்கின்றனர். பல பெண்கள் தங்களின் தொழிலை டைம் பாஸ் செய்வது மாதிரியும், வீட்டு வேலைகளுக்கு நடுவில் பொழுதுபோக்காகவும் செய்து வருகிறார்கள்.

தொழிலை எவ்வாறு நேர்த்தியாகச் செய்ய வேண்டும்? தயாரித்த பொருளை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும்? வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும்? ஒருவரை நிரந்தர வாடிக்கையாளராய் மாற்றுவது எப்படி என்கிற விஷயங்கள் தெரியாமலே, ஏதோ ஒரு வேகத்தில் இறங்கி, முட்டி மோதி தொழிலின் சூட்சுமங்களைக் கற்க முயல்கின்றனர்.தொழில் செய்ய நினைக்கிற பெண்கள் தங்கள் அர்ப்பணிப்பை முழுமையாக தொழிலுக்குள் இறக்கி வெற்றியை நோக்கி தங்களை நகர்த்துவது கிடையாது’’ என்ற வி.கே, ‘‘முக்கியமாக இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றது.

ஒன்று தொழிலுக்கான மைன்ட் செட். இரண்டாவது தொழிலுக்கான ஸ்கில் செட். பெரும்பாலான பெண் தொழில்முனைவோருக்கு மைன்ட்செட் பிரச்னை உண்டு. நான் செய்கின்ற தொழிலில், நான் எந்த மாதிரியான ஐடென்டியுடன், எப்படிப்பட்ட பெர்சனாலிட்டியாக இருக்க வேண்டும் என்பது இதில் மிக முக்கியம். கோடிகளில் தொழில் செய்வார்கள். ஆனாலும் மைன்ட்செட் பிரச்னையில் இருப்பார்கள். சரியான மைன்ட் செட் இல்லையெனில் தொழிலில் நீடிக்க முடியாது.

மைன்ட்செட் என்றதுமே பலரும் மோட்டிவேஷன் ஸ்பீச் என நினைக்கிறார்கள். இது நாட் ஜஸ்ட் மோட்டிவேஷன். நம் ஆழ்மனதின் பிரதிபலிப்பே நாம் செய்கின்ற தொழில். நான் என்ன மாதிரியான மனநலம் கொண்டவர் என்பதை அடிப்படையாகக் கொண்டே தொழிலின் வெளிப்பாடும் இருக்கும்’’ என்கிற வி.கே. இதற்கென பெண் தொழில் முனைவோருக்கு மைன்செட் பயிற்சி வழங்குகின்றார். ‘‘அடுத்தது ஸ்கில் செட். இதில் இரண்டு வகையான ஸ்கில் செட் இருக்கிறது.

ஒன்று பிஸினஸ் ஸ்கில். இது எல்லோருக்கும் பொதுவானது. இதில் தங்களிடம் உள்ள பிராண்டை பில்ட் பண்ண நினைப்பது. இரண்டாவது டொமைன் ஸ்கில்ஸ். செய்கிற தொழிலில் புதிது புதிதாக என்னவெல்லாம் அப்டேட்ஸ் வருகிறது என்பதைத் தெரிந்து அப்டேட் செய்துகொண்டே வருவதே டொமைன் ஸ்கில்ஸ்.பெண் தொழில்முனைவோரைப் பொறுத்தவரை அவர்களுக்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றது.

தங்களின் தொழிலை முறைப்படுத்தி ஒரு ஃபார்மேஷனுடன் திட்டங்களை வகுத்து தொழில் செய்தால் வெற்றி நிச்சயம்’’ என்கிற வி.கே, ‘‘இந்த மாதிரியான பெண்களிடம் அவர்களின் பாஷன்(passion) குறித்து கேட்பதுடன், என்ன மாதிரியான தொழில் வொர்க் அவுட் ஆகும், அவர்களின் உற்பத்தி, தயாரிப்பு குறித்த தெளிவு, சந்தையில் அதற்கான தேவை, வாடிக்கையாளர் பக்கம் நின்று என்ன மாதிரியான விஷயங்களைச் செய்ய வேண்டும், எந்த இடத்திற்கு அவர்களின் தொழிலைக் கொண்டுவர வேண்டும், ரெகுலர் வாடிக்கையாளரை அணுகும் முறை, முதல்முறை நம்மைத் தேடி வரும் வாடிக்கையாளரை எவ்வாறு அணுகுவது, எங்கோ இருக்கும் வாடிக்கையாளரை ரெகுலர் வாடிக்கையாளராய் மாற்ற இன்புளூயன்ஸ் பில்ட் செய்வது குறித்தெல்லாம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

விற்பனையில் மட்டுமே குறி வைக்காமல், தயாரிப்பில் உள்ள கூடுதல் வசதி, பயன்பாடு குறித்த ஆலோசனைகளை வழங்கி வாடிக்கையாளரை எஜுகேட் பண்ணுவது குறித்தும் சொல்லித் தரப்படும். மேலும் தொழிலுக்கான நிதி திட்டம், நிதி மேலாண்மை, ஒரு பொருளை வாங்கு எனச் சொல்லாமலே விற்பனை செய்கின்ற யுக்தி,தயாரிப்பை காட்சிப் பொருளாக (display) மட்டுமே வைக்காமல் அது குறித்த விளக்கத்தை வாடிக்கையாளருக்கு கொடுப்பது பற்றியும் ஆலோசனைகள் உண்டு.

தொழில்முனைவோராக இறங்கும்போது ஃபியர் ஆஃப் பெயிலியர் கண்டிப்பாக இருக்கும். இதை எப்படி ஓவர்கம் செய்து, வளர்ச்சி மைன் செட்டிற்கு மாற்றுவது எனக் கற்றுத்தருவதுடன், மற்றவர்களோடு நம்மை ஒப்பீடு செய்து பார்ப்பதை நிறுத்தவும் பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்படும். என் பயிற்சி வகுப்புகள், ஒரு ஸ்டெக்ஷராக உங்கள் தவறுகள் இப்படியாகத்தான் நடக்கும். அதை இப்படித் தவிர்க்கலாம் என்கிற விழிப்புணர்வு கூடுதலாய் கிடைக்கும். தொழில் செய்வதில் இருக்கும் பள்ளம் மேடு தெரிய வரும்.’’

இதுதான் நான்…

‘‘நான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர். வசிப்பது தலைநகர் டெல்லி. ஃபேஷன் டிசைனிங் துறையில் பட்ட மேற்படிப்பை மதுரை கல்லூரியில் முடித்து, பிறகு டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் தொடர்பான எம்பிஏ படிப்பை கோவை கல்லூரி ஒன்றில் முடித்தேன். 2006ல் வேலை கிடைத்து டெல்லி வந்தேன். 18 வருடங்கள் ஓடிவிட்டது நூறு கோடியில் தொடங்கி, அதிகபட்சம் ஆயிரம் கோடி வரை தொழில் செய்கின்ற பெரும் நிறுவனங்களில் பிஸினஸ் கன்சல்டென்டாக 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி இருக்கிறேன்.

ஒரு தொழிலை ஸ்ட்ரெக்சராக எவ்வாறு செய்ய வேண்டும், தயாரிப்பு, டிரேடிங், சர்வீஸ், அதில் நடைபெறும் தவறுகள், குளறுபடிகள் குறித்தெல்லாம் அனுபவங்கள் கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கான சம்பளம் 1 லட்சத்தை தொட்டபோது, துணிந்து வேலையை ராஜினாமா செய்தேன்.தொழில் செய்வதற்கான வழிகாட்டுதல் இல்லாமலே தவிப்பவர்களுக்கு வழிகாட்டியாக மாற நினைத்து, பிஸினஸ் கன்சல்டிங் துறையில் கால் பதித்தேன். எனக்கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகள் சரளமாக வரும். டெல்லியில் இருந்து கொண்டு, தாய் மொழி தமிழை பேசும் வாய்ப்பு குறைந்ததால், தமிழ்நாட்டுப் பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சியினை என்னுடைய ‘பிஸ் லேடி’ தளத்தில் தமிழில் வழங்கி வருகிறேன்.’’

தொகுப்பு: மகேஸ்வரி

The post பெண் தொழில்முனைவோர்களை வழிநடத்தும் பிஸ் லேடி! appeared first on Dinakaran.

Tags : Biz ,Biz lady ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?