×

ஆசியாவில் ஒரே கல்லூரியில் மட்டுமே இருக்கின்ற BRSc படிப்பு

நன்றி குங்குமம் தோழி

‘‘திருச்சி ஹோலிகிராஸ் தன்னாட்சிக் கல்லூரியில் மட்டுமே புனர்வாழ்வியல் துறை (BRSc- Bachelor of Rehabilitation Science) பாடப்பிரிவு இருக்கிறது’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் அதே கல்லூரியில் புனர்வாழ்வு அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் ட்யூரின் மார்டினா. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு இது. சிறப்புத் தேவை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகவே 1983ல் இந்தப் படிப்பு இங்கு தொடங்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது.

‘‘மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆரம்ப கால கண்டறிதலில் தொடங்கி, அவர்களுக்கு நல்ல ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கிற வரைக்குமான அனைத்துவிதமான பயிற்சியும் பிராக்டிக்கலாகவும், தியரியாகவும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.2016 ஆர்.டி.டபிள்யூ.டி ஆக்ட் மூலமாக 21 விதமான ஊனம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த 21 பிரச்னைக்குமான மறுவாழ்வு கட்டமைப்பை நாங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம். கண்டறியப்பட்ட குறைபாடு உள்ளவர்களிடையே பணியாற்றவும், அவர்களுக்கான கல்வி, தேவைப்படுகிற வொக்கேஷனல் பயிற்சி, அவர்களுக்கான மறுவாழ்வு தருவதற்குமான அனைத்து விஷயங்களையும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களாக வழங்குகிறோம்.

இதில் நான்குவிதமான கோணத்தில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது மெடிக்கல் ரிகாபிளிடேஷன். அதாவது, மருத்துவம் சார்ந்த மறுவாழ்வு. இரண்டாவது இன்குளூசிவ் எஜுகேஷன் வழியே குழந்தைகளின் சிறப்புக் கல்வி. மூன்றாவது அவர்களின் திறன் சார்ந்த வொக்கேஷனல் பயிற்சி. நான்காவது எல்லா நிலைகளிலும் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்கும் சோஷியல் ரிகாபிளிடேஷன் முறை.

இதில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புகளும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இளங்கலையில் 40 இடமும் முதுகலையில் 20 இடமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 21 சிறப்புப் பிரிவிலும் 52 ரிசர்ச் காலர்ஸ் மற்றும் 6 அங்கீகரிக்கப்பட்ட ரிசர்ச் கைடுகள் இருக்கின்றனர். இவை தவிர்த்து பி.எட் மற்றும் எம்.எட் படிப்பும் உண்டும்.புது டெல்லியில் இயங்கும் ரிகாபிளிடேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தோடு, ஆர்.சி.ஐ அங்கீகாரமும் பெற்ற பாடத் திட்டம் என்பதால், மாணவர்கள் படிப்பை முடித்ததுமே, சி.ஆர்.ஆர் பதிவு எண் வழங்கப்படும். பதிவு எண் உள்ளவர்களால் மட்டுமே இந்தத் துறையில் பணியாற்ற முடியும்.

எங்கள் கல்லூரியில் படித்த பி.ஆர்.எஸ்.சி (BRSc) மற்றும் எம்.ஆர். எஸ்.சி(MRSc) மாணவர்கள் இந்தியா முழுவதும் பணியாற்றுகிறார்கள். பல்வேறு மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கான புனர்வாழ்வு மையங்களையும் (Rehabilitation Centre) தொடங்கி நடத்தி வருகிறார்கள். அரசு வேலை வாய்ப்பும் இந்த படிப்பிற்கு உண்டு. வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் ஒன் டூ ஒன் முறையில் எங்கள் மாணவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தப் படிப்பு இளங்கலை அறிவியல் (BSc) படிப்பிற்கு கீழ் வருகிறது.

அவ்வாறு இல்லாமல் தனிப்பட்ட பட்டப்படிப்பாக அறிமுகம் செய்தால், படிக்கும் மாணவர்களுக்கு தனிப்பட்ட இளங்கலை படிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்’’ என்கிறார் இணைப் பேராசிரியர் ட்யூரின் மார்டினா. ‘‘அர்ப்பணிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை உள்ள மாணவர்கள் கண்டிப்பாக இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்’’ என நம்பிக்கை கொடுத்து விடைபெற்றார்.

வானவில், BRSc மாணவி

‘‘நான் மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு அதிகம் பழகியிருக்கிறேன். என்னிடத்தில் அவர்கள் அதிகமாக நெருங்கி ரொம்பவே ஒட்டிக்கொள்வார்கள் என்பதால், எனக்கு அவர்கள் குறித்த புரிதல் இயல்பிலே இருந்தது. சிறப்புக் குழந்தைகளுக்காக பொறுமையாக என்னால் எதையும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை என் மீது எனக்கு அதிகமாக இருந்ததால் இந்த பாடத் திட்டத்தில் இணைந்து படித்தேன்.

இதில் சமூகப் பணி, மருத்துவம் மற்றும் கற்பித்தல் என மூன்றும் இணைந்தே இருக்கிறது. சுருக்கமாக இதனை சோஷியோ மெடிக்கல் கோர்ஸ் எனச் சொல்லலாம். ஒவ்வொரு டிசபிளிட்டிக்கும் என்று தனி பேப்பர் உண்டு. ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, சைன் லாங்வேஜ் என எல்லாவிதமான தெரபி குறித்தும் பாடப் பிரிவுகள் உண்டு. பாடத் திட்டத்தில் 40 சதவிகிதம் தியரி என்றால் 60 சதவிகிதம் பிராக்டிக்கல் இருக்கும். ஒவ்வொரு செமஸ்டருக்கும் ஒன்று அல்லது இரண்டு இன்டர்வென்ஷன் பேப்பர் மற்றும் இன்டன்ஸிப் உண்டு.

வருடத்திற்கு ஒரு மாதம் சம்மர் பிளேஸ்மென்டில் ஏதாவது ஒரு டிசபிளிட்டி ரிலேட்டெடாக இருக்கும் ரிகாபிளிடேஷன் சென்டரில் பணியாற்ற வேண்டும். 21 டிசபிளிட்டியில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து டீமாக இணைந்து புராஜெக்ட் செய்ய வேண்டும். இவை எல்லாமும் கற்று செய்தால்தான் மாற்றுத்திறனாளி குழந்தைகளை வழிநடத்த முடியும்.

மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்றை பார்த்ததுமே என்ன மாதிரியான குறை அந்தக் குழந்தைக்கு இருக்கிறது என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடும் அளவுக்கு கல்லூரியின் பாடத்திட்டங்கள் சிறப்பாக இருக்கும். எங்களின் பாடத் திட்டங்கள் மூலமாக நாங்கள் குழந்தைகளுக்குச் செய்வது பேஸிக் ஸ்கிரீனிங் மட்டுமே. உதாரணத்திற்கு ஒரு குழந்தையின் டௌன் சிண்ட்ரோமை அதன் முகத்திலேயே கண்டுபிடித்து, எந்த நிலையில் குழந்தை இருக்கிறது என ஆராய்ந்து, தேவைப்படும் தெரபியினை ரெக்கமென்ட் செய்வோம். என்னுடைய கனவு, பாஷன் எல்லாமே மியூஸிக்… மியூஸிக் என்பதால், எம்.எஸ்.டபிள்யூ படித்துக்கொண்டே மியூஸிக் தெரபியும் படிக்கப் போகிறேன். தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே, எம்.ஆர்.எஸ்ஸி மற்றும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை படிக்கும் எண்ணமும் இருக்கிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post ஆசியாவில் ஒரே கல்லூரியில் மட்டுமே இருக்கின்ற BRSc படிப்பு appeared first on Dinakaran.

Tags : Asia ,Kunkumum ,Trichy Holycross Autonomous College ,Turin Martina ,Dinakaran ,
× RELATED சென்னையில் தரையிறங்க முடியாமல்...