×

பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முதல்வர் சந்திரபாபுவுடன் சந்திப்பு: மக்களவை சபாநாயகராக நியமனமா?

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன், மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்து முதல்வராக சந்திரபாபுநாயுடு கடந்த வாரம் பதவியேற்றார். இக்கூட்டணியில் ஜனசேனா 21, பாஜக 8 சட்டமன்ற தொகுதிகளை பிடித்தது. அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 16, ஜனசேனா 2, பாஜக 3 இடங்களை வென்றது. ஒன்றிய பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக சந்திரபாபுநாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் நிபந்தனைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படும் நிலையில் உள்ளது.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியில் ஒரு எம்பிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சபாநாயகர் பதவியை தங்களுக்கு தரும்படி சந்திரபாபுநாயுடு வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதனை ஏற்க மறுத்த ஒன்றிய பாஜக அரசு, ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு சபாநாயகர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாம்.

அதன்படி என்டிஆரின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனியுமான மாநில பாஜக தலைவரும் எம்பியுமான புரந்தேஸ்வரிக்கு அந்த வாய்ப்பு வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவை சேர்ந்த தனது உறவினர் பெண்ணுக்கு சபாநாயகர் பதவி கிடைப்பதன்மூலம் சந்திரபாபுநாயுடுவை திருப்திபடுத்த முடியும் என பாஜக கருதுகிறதாம். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டம் வரும் 24ம்தேதி நடைபெற உள்ள நிலையில் புரந்தேஸ்வரியை சபாநாயகர் வேட்பாளராக களம் இறக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் புரந்தேஸ்வரி, நேற்றிரவு உண்டவல்லியில் முதல்வர் சந்திரபாபுநாயுடுவை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது அவருடன் ஒன்றிய அமைச்சர் பூபதிராஜு சீனிவாசவர்மா மற்றும் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடனிருந்தனர். புரந்தேஸ்வரியும், சந்திரபாபுநாயுடுவும் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வருடனான சந்திப்புக்கான காரணம் குறித்து பாஜக அல்லது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

 

The post பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முதல்வர் சந்திரபாபுவுடன் சந்திப்பு: மக்களவை சபாநாயகராக நியமனமா? appeared first on Dinakaran.

Tags : BJP ,President ,Purandeshwari ,Chandrababu ,Lok Sabha ,Thirumalai ,AP ,Chandrababu Naidu ,Burundeswari ,Chandrababunayud ,Telugu Desam Party ,Andhra Pradesh ,
× RELATED பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு!!