×

வடபழனியில் டீக்கடையில் தகராறு சினிமா புரொடக்‌ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றி ரவுடிகள் அராஜகம்: 50 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: வடபழனியில் டீக்கடையில் ஏற்பட்ட தகராறில் சினிமா புரொடக்‌ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றி 2 ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 50 சதவீத காயத்துடன் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராகவேந்திரா(34). இவர் சினிமா புரொடக்‌ஷன் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு சிகரெட் வாங்க வந்துள்ளார். அப்போது கடைக்காரர் உள்ளே இருந்ததால், ராகவேந்திரா கடையின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் அதே பகுதியை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சந்தீப்குமார், அவரது நண்பருடன் கடைக்கு வந்தார்.

கடையில் யாரும் இல்லையா என்று ராகவேந்திராவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், உள்ளே வேலையாக இருக்கிறார், சற்று காத்திருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சந்தீப்குமார் எங்களையே காத்திருக்க சொல்வியா என கூறி, டீக்கடையில் இருந்து முறுக்கு பாட்டிலை எடுத்து ராகவேந்திரா தலையில் உடைத்துள்ளனர். அதோடு இல்லாமல் டீக்கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை பாத்திரத்துடன் எடுத்து ராகவேந்திரா மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வலி தாங்க முடியாமல் ராகவேந்திரா கதறி துடித்தார்.

அருகில் இருந்தவர்கள் ராகவேந்திராவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 50 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் ராகவேந்திரா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடி சந்தீப் குமார் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர். அதேநேரம் இன்று அதிகாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகவேந்திராவிடம் அல்லிக்குளம் 2வது விரைவு நீதிமன்ற நடுவர் கனகராஜ் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார்.

 

The post வடபழனியில் டீக்கடையில் தகராறு சினிமா புரொடக்‌ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றி ரவுடிகள் அராஜகம்: 50 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vadapalani ,Chennai ,Raghavendra ,Gangaiyamman Temple Street, Vadapalani, Chennai.… ,Anarchy ,
× RELATED வடபழனி டீக்கடையில் தகராறு சினிமா...