×

ஐஸ் வியாபாரியை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது: தப்பிய 3 பேருக்கு வலை

அண்ணாநகர்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா (49). சென்னை கோயம்பேடு முனியப்பாநகர் பகுதியில் உள்ள ஐஸ் குடோனில் தங்கி, தினமும் மூன்று சக்கர சைக்கிளில் சென்னை மற்றும் நெற்குன்றம் பகுதியில் ஐஸ் வியா பாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம்தேதி இரவு கோயம்பேடு காவல்நிலையம் அருகே கருப்பையா ஐஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பைக்கில் மதுபோதையில் வந்த 6 பேர் கும்பல், ஐஸ் வேண்டும் என கருப்பையாவிடம் கேட்டுள்ளனர். அவர், ஐஸ் எடுத்து கொடுத்தபோது, ஐஸ் வேண்டாம் எனகூறி கிண்டல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த கருப்பையா, எதற்காக கிண்டல் செய்கிறீர்கள், ஐஸ் வேண்டும் என்றால் வாங்குங்கள் இல்லை என்றால் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திர மடைந்த கும்பல், கருப்பையாவை சரமாரி தாக்கி அவரிடம் இருந்த செல்போன், 700 ரூபாயை பறித்துகொண்டு பைக்கில் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் கருப்பையா புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 6 பேர் கும்பல் ஐஸ் வியாபாரியை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கோயம்பேடு பகுதியில் 3 பேர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், நெற்குன்றம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 3 கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாகவும், மதுபோதையில் என்ன செய்வது என தெரியாமல் ஐஸ் வியாபாரியை தாக்கி செல்போன், பணம் பறித்தது எங்களுடைய தவறு என்பதை இப்போது உணர்கிறோம், இனிமேல் இதுபோன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என கைதான கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post ஐஸ் வியாபாரியை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது: தப்பிய 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Karupaiya ,Sivaganga District ,Chennai ,Ice Kudon ,Coimbed Muniyapanagar ,Chenkunram ,
× RELATED குளித்தலை அண்ணாநகர் புறவழிச்...