×

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல்; பள்ளிப்பட்டு சார்பதிவாளரிடம் விடிய விடிய விசாரணை

திருத்தணி: பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.11 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சார்பதிவாளரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் வீட்டுமனை மற்றும் நிலங்களின் பத்திரப்பதிவுக்கு இடைத்தரகர்கள் மூலம் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் பெற்று வந்துள்ளனர். இதுதொடர்பான பல்வேறு புகாரின்பேரில் நேற்று மாலை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் போலீசார் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக, பள்ளிப்பட்டு சார்பதிவாளர் (பொறுப்பு) மோகன்ராஜ், பத்திரப்பதிவு எழுத்தர் செல்வராஜ் என்பவரின் காரில் சோளிங்கர் சென்றபோது, அவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், காருக்குள் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை காருடன் மீண்டும் அலுவலகத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர். அங்கு காருக்குள் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை போலீசார் எண்ணி பார்த்தனர். அதில், கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் ஒரு இடைத்தரகர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களிடம் கணக்கில் வராத ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், இதுசம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து சார்பதிவாளர் பொறுப்பில் உள்ள மோகன்ராஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி கூறுகையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.11 லட்சம் ரொக்கப் பணம் குறித்து சார்பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி, அவர்கள்மீது துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல்; பள்ளிப்பட்டு சார்பதிவாளரிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Tags : Trithani ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது