திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே தானியங்கி கேட்டில் சிக்கி 9 வயது சிறுவன் இறந்தான். இதுகுறித்து அறிந்த சிறுவனின் பாட்டி அதிர்ச்சியில் இறந்தார். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர். அவரது மகன் முகம்மது சினான் (9). அருகில் உள்ள ஒரு பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று மாலை அங்குள்ள ஒரு பள்ளிவாசலுக்கு செல்வதற்காக சினான் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான். சிறிது நேரம் கழித்து சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு தானியங்கி கேட்டில் சிக்கி மயங்கிக் கிடப்பதை அந்த பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் முகம்மது சினான் பரிதாபமாக இறந்தான். இதற்கிடையே சினானை பார்ப்பதற்காக கபூரின் தாய் ஆசியா (51) மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பேரன் இறந்து விட்டான் என்ற தகவலை அறிந்த ஆசியா துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் உறைந்தார். சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் வைத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசியா மரணமடைந்தார்.
The post கேட்டில் சிக்கி சிறுவன் பலி: அதிர்ச்சியில் பாட்டியும் மரணம் appeared first on Dinakaran.