×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு: மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல்!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட கடந்த 14-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகரனிடம் 5 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் பண மாலை அணிந்து, டெபாசிட் தொகையை சில்லறை நாணயங்களாக கொடுத்தார். கோவையை சேர்ந்த நூர் முகமது 44வது முறையாக விக்கிரவாண்டியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் டெபிட் கார்டுகளை மாலையாக அணிந்து வந்து மனுதாக்கல் செய்தார். மற்றொருவர் காந்தி வேடமணிந்து வந்து வேட்புமனு அளித்தார்.

சேலம் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், சேலத்தை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இரண்டாம் நாளில் வேலூரை சேர்ந்த முனியப்பன்(76), 3வது நாளில் திருவள்ளுரை சேர்ந்த மருத்துவர் நரேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 19ம் தேதி திமுக அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி உள்ளிட்ட 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளித்த மனுக்கள் மீது 24ம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு: மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Constituency Midterm Election ,Vikrawandi ,Vikrawandi Assembly ,Vikrawandi midterm elections ,Viluppuram ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...