×

நாட்றம்பள்ளி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் அரசு பள்ளியில் காலை உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

ஜோலார்பேட்டை : நாட்றம்பள்ளி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று காலை அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் சாப்பிட்டு ஆய்வு செய்தார். நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை 24 மணி நேரமும் கிராமத்தில் தங்கி மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் துறை அதிகாரிகளுடன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை அப்பகுதியில் உள்ள தெரு முனை மின்சார விளக்குகள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டார். இதில் சில மின்சார விளக்குகள் எரியாததை கண்ட கலெக்டர் ஊராட்சி செயலார்களிடம் விளக்கம் கோரி, நாளை காலைக்குள் மக்கள் பயன்பாட்டிலுள்ள அனைத்து மின்சார கம்பங்களிலும் மின்சார விளக்குகள் இயங்குவதை உறுதி செய்யப்பட வேண்டு என உத்தரவிட்டிருந்தார். இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளும் போது மின்சார விளக்குகளை பொருத்தப்படும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் வாயிலாக தயார் செய்யப்படும் உணவினை ஆய்வு மேற்கொண்டு, தொடர்ச்சியாக கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டார். அப்போது பள்ளியில் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட உணவின் சுவை, குறைபாடுடன் உள்ள நிலைப்பாட்டை கண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு சமையலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களிடம் கற்றல் திறன் மற்றும் எழுத்து திறன் குறித்தும் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதில் அப்பகுதி பெண் ஒருவர் எனக்கு வீடு கட்டி தர வேண்டும், எந்தவொரு வசதிகள் இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதை கேட்ட கலெக்டர் அப்பெண்ணுடன் வருகை புரிந்த அவருடைய மகளிடம் தாங்கள் படித்து கொண்டிருக்கீகளா என்று கேட்டார். இதில் அந்த மாணவி நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். தற்போது வசதியின்மையை கருதி பள்ளி மேற்படிப்பை என்னுடைய தாய் நிறுத்தி விட்டார் என்று தெரிவித்தார்.

இதை கேட்ட கலெக்டர் உங்கள் தாயின் கோரிக்கை படி வீடு கட்டி தரும் பணியினை கூடிய விரைவில் நிறைவேற்றி தருகிறேன். நீங்கள் தங்களுடைய மகளை மேற்படிப்பு படிக்க வைக்க உறுதி அளிக்க வேண்டுமென தெரிவித்து, அப்பகுதிக்கு அருகாமையில் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் தொடர்பு கொண்டு இவருக்கு 11ம் வகுப்பு படிப்பதற்கு சேர்க்கை வழங்கிட தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நாளை அப்பள்ளியில் நீங்கள் சேர்ந்த தகவலினை என்னுடைய தொலைபேசியின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என மாணவியிடம் கலெக்டர் தொலைபேசி எண்ணை வழங்கினார். இதைகண்ட அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், கிராமத்தில் உள்ள பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் வாயிலாக தயார் செய்யப்பட்ட உணவினை ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டறிந்து, அப்பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் தரையில் அமர்ந்து காலை உணவினை அருந்தினார்.

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட அலுவலர் பிரியா, பள்ளி ஆசிரியர்கள், தூய்மை பணியார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post நாட்றம்பள்ளி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் அரசு பள்ளியில் காலை உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Nadramalli ,Jolarpet ,Natramballi ,Kotur Uradchi ,Dinakaran ,
× RELATED நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம்...