×

ஜிசிடி கல்லூரி அருகே மூடப்படாத பாதாள சாக்கடை

*அடுத்த விபத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோவை : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாதாள சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் மூடி இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி 100 அடி சாலையோரத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடிகள் இல்லாமல் இருந்த நிலையில், அதனை கவனிக்காமல் சென்ற பெண் ஒருவர் சாக்கடை கால்வாய் குழிக்குள் தவறி விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

பின்னர், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் உதவி செயற்பொறியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியின் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைகள் மூடி இல்லாமல் காட்சி அளிக்கிறது. இந்த பாதையை கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில், மூடப்படாமல் உள்ள பாதாள சாக்கடையால் மீண்டும் ஒரு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதே போல் நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் இருப்பதாகவும், அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

The post ஜிசிடி கல்லூரி அருகே மூடப்படாத பாதாள சாக்கடை appeared first on Dinakaran.

Tags : GCT College ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை ஜிசிடி கல்லூரியில் இயந்திரவியல்...