×
Saravana Stores

கடவூர் அருகே தளிவாசல் முள்ளிப்பாடி மந்தையில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி

*பேரூர் ஊருகட்சி மந்தைமாடு முதலிடம்

*தேவராட்டத்துடன் பக்தர்கள் கோலாகலம்

தோகைமலை : கடவூர் அருகே தளிவாசல் முள்ளிப்பாடி மந்தையில் நடந்த மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் பேரூர் ஊருகட்சி மந்தைமாடு முதலிடத்தை பிடித்தது. திருவிழாவை தேவராட்டத்துடன் பக்தர்கள் கோலாகலமாக ெகாண்டாடினர்.கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் பகுதியில் உள்ள அழகன் விவசாய தோட்டத்தில் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு முள்ளிபாடி மந்தைக்கு உட்பட்ட நாகம்மாள் மற்றும் ராணியம்மாள் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் சலை எருது மாலை ஓட்டம் நடத்த வேண்டும் என்று இவர்களது சமூகத்தினருக்கு கனவில் காட்சி அளித்து வந்ததாக தெரிகிறது. பல்வேறு கிராமங்களில் முள்ளிப்பாடி மந்தை என்று அறிவித்து மாலை ஓட்டம் நடந்து வருகிறது.

ஆனால் முள்ளிப்பாடிக்கு உட்பட்ட முள்ளிப்பாடி மந்தையில் மாலை ஓட்டம் நடைபெறாமல் இருந்து வந்து உள்ளது. இதனை அடுத்து முள்ளாபடி மந்தையில் முதன் முதலாக நாகம்மாள் மற்றும் ராணியம்மாள் கோயில் முன்பாக இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கோயில் திருவிழா கடந்த 15.6.2024 சனிக்கிழமை அன்று முள்ளிபாடி மந்தை கருணைகிரி (எ) புல்லட்நாயக்கர் தலைமையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் முள்ளிப்பாடி மந்தையை சேர்ந்த பக்தர்கள் 5 நாட்கள் விரதம் இருந்து நாகம்மாள் மற்றும் ராணியம்மாள் சாமிக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.

தொடர்ந்து 5ம் நாள் அன்று நாகம்மாள் மற்றும் ராணியம்மாள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வான வேடிக்கையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இவர்களை முள்ளிபாடி மந்தை சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நாகம்மாள் மற்றும் ராணியம்மாள் கோயில் முன்பாக 14 மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு தனித்தனியே புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க முள்ளிப்பாடி மந்தை எதிரே சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு உள்ள எல்லைசாமி கோயிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து முள்ளிப்பாடி மந்தையில் நாகம்மாள் மற்றும் ராணியம்மாள் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 500 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் கரூர் மாவட்டம் கூடலூர் ஊராட்சி பேரூர் ஊருகட்சி தாதல் மாதாநாயக்கர் மந்தைமாடு முதலாவதாகவும், கரூர் மாவட்டம் தாசில்நாயக்கனூர் பசிபேர் நாயக்கர் மந்தை மாடு 2வதாகவும் ஓடி வந்து எல்லை கோட்டை தாண்டியது.

அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை சலை எருது மாடுகள் மீது தூவி வரவேற்று எலுமிச்சை பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் பட்டவன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் சாமிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா முடித்து வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கடவூர் அருகே தளிவாசல் முள்ளிப்பாடி மந்தையில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thalivasal Mullipadi ,Kadavur ,Berur ,Kolakalam ,Thokaimalai ,
× RELATED கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு...