×

நீலகிரி மாவட்ட விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

*கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஊட்டியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பேசினார். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், ஊட்டி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான தேயிலை, மலைப்பயிர்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதன்மை மேலாளர் தீபன் சக்கரவர்த்தி வரவேற்றார். வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் அழகுசுந்தரம் பேசுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் மண்வளம் நன்றாக உள்ளது. நீலகிரியில் 50 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. மொத்த விவசாயம் செய்யும் பகுதியில் இது 70 சதவீதம் ஆகும். மீதம் தோட்டக்கலை சார்ந்த பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு சிறப்பான முறையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சந்தைப்படுத்துதல் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை. விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி விளை பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. உள்ளூர் சந்தை மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இதற்கான ஏற்றுமதி உள்ளது.

சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதுதவிர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி, நீலகிரி மாவட்டத்தில் ஏற்றுமதி வசதி மையம் (எக்ஸ்போர்ட் பெசிலிடேசன் சென்டர்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மையம் அமைப்பதற்கான தகுதி வாய்ந்த இடங்கள் ஆய்வு செய்து விரைவில் துவக்கப்படும். இம்மையத்தின் மூலம் விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி ஏற்றுமதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்’ என்றார்.

கூடுதல் ஆட்சியர் கவுசிக் தலைமை வகித்து பேசுகையில், ‘இயற்கை விவசாயத்திற்காக அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி சிறிய மாவட்டமாக இருந்தாலும், வளமிகுந்த மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் அடையாளமாக தோட்டக்கலை விளங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவும், அவற்றை சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்டவைகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இங்கு உற்பத்தி செய்ய கூடிய பெரும்பாலான பயிர்கள் ஏற்றுமதி செய்வதற்கான தகுதி வாய்ந்தவை.

கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள், சைனீஸ் காய்கறிகளுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. ஆனால் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக விவசாயிகளும், வாங்குபவரும் நேரடியாக சந்தித்து விற்பனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விற்பனை பொருட்களுக்கான அதிக வருவாய் கிடைக்கும்.

நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே உற்பத்தி செய்ய கூடிய விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும். புவிசார் குறியீடுகள் பெறுவதன் மூலம் அவற்றின் சந்தை மதிப்பு கூடும். அவற்றை ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புகளும், விற்பனை வாய்ப்புகளும் பெருகும். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். உற்பத்தி செய்யும் பொருட்களை அப்படியே விற்காமல் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும், அவற்றை பிராண்டிங் செய்து விற்பதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும்.

பருவமழை காலங்களில் மண்சரிவு ஏற்படுவது, விவசாய நிலங்களில் மண் அரிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே விவசாயிகள் பழ மரங்கள் வளர்க்க முன்வர வேண்டும். இவ்வகை மரங்கள் வளர்ப்பதால் மண்வளம் காக்கப்படும். தோட்டக்கலைத்துறை பழ விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவிட மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசும் தயாராக உள்ளது, என்றார்.

தொடர்ந்து இந்திய அரசின் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய வணிக மேம்பாட்டு மேலாளர் கீர்த்தனா பங்கேற்று இந்தியாவில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன, எந்த மாதிரியான உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, ஏற்றுமதி செய்ய என்ன மாதிரியான உரிமம் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கமளித்தார்.

தேயிலை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து குன்னூர் தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் உமா மகேஷ்வரி விளக்கமளித்தார். வெளிநாட்டு தொழில் மேம்பாட்டு அலுவலர் சிவஞானம், ஏற்றுமதி சார்ந்த பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய குழுக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். வேளாண்மை அலுவலர் கலைவாணி நன்றி கூறினார்.

The post நீலகிரி மாவட்ட விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி appeared first on Dinakaran.

Tags : Nilgiris District ,Ooty ,Nilgiri district ,Tamil Nadu ,Nilgiri ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம்