×

காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கிய 1.11 ஏக்கரில் மனித கழிவு மேலாண்மை மையம் கட்ட பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

*கூடங்குளம் மக்கள் கலெக்டரிடம் மனு

கூடங்குளம் : கூடங்குளத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்காக ஒதுக்கிய ஒரு ஏக்கர் 11 சென்ட் நிலத்தில் மனித கழிவு மேலாண்மை மையம் கட்டுவதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக ஊர்மக்கள் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனில் கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குழி, திருவம்பலாபுரம் ஊராட்சிகளும், வள்ளியூர் யூனியனில் செட்டிகுளம், இருக்கன்துறை, அடங்கார்குளம் ஊராட்சிகளும் உள்ளன.

இப்பகுதிகள் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்டதாகும். இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் உள்பட 50 பேர் பணிபுரிகின்றனர். இந்த காவல் நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லாததால் கடந்த 1999ல் கூடங்குளத்திற்கு பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 11 சென்ட் நிலம் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு கட்டுவதற்காக அப்போதைய பஞ்சாயத்து தலைவரால் தமிழ்நாடு ஆளுநரின் பெயரில் எழுதிக் கொடுக்கப்பட்டது.

நிலம் கொடுத்து 25 ஆண்டுகளாகியும் இதுவரை காவல் நிலையமோ, காவலர் குடியிருப்போ கட்டப்படவில்லை. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக எல்லைக்குள் காவல்நிலையம் மட்டும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்பு கட்டப்படாததால் காவலர்கள் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிகின்றனர். வாடகை வீடுகளில் போதுமான தண்ணீர் இல்லை, வாடகையும் அதிகம் என்பதால் சக காவலர்களோடு சேர்ந்து வாடகை அறையில் தங்கி பணிபுரிகின்றனர்.

மேலும் தரமான உணவகங்களும் இல்லாததால் இங்கு தங்கி பணியாற்றுவதில் மனரீதியாக பல்வேறு கஷ்டங்களை சந்திக்கின்றனர். இதனால் பக்கத்து மாவட்டத்திலிருந்து பணி மாறுதலாகி கூடங்குளம் வரும் காவலர்கள் விரைவில் சொந்த மாவட்டத்திற்கே பணி மாறுதல் வாங்கிச் செல்லும் நிலை தான் உள்ளது. இதனால் கூடங்குளம் காவல் நிலையம் காவலர்கள் பற்றாக்குறையுடனே செயல்படுகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், கூடங்குளத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு ஏக்கர் 11 செண்ட் நிலத்தில் மனித கழிவு மேலாண்மை மையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தின் அருகில் கூடங்குளம் அணுமின் நிலைய சிஎஸ்ஆர் நிதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட திருமண மண்டபமும், அரசு மருத்துவமனையும், அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது.

இங்கு மனித கழிவு மேலாண்மை மையத்தை அமைத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே கூடங்குளத்தில் மனித கழிவு மேலாண்மை மையம் அமைக்க கூடாது என பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் கார்த்திகேயனுக்கு புகார் மனுவையும் அனுப்பி உள்ளனர்.

முடிவை கைவிட வேண்டும்

அதில், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலைகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றுகின்றனர். செட்டிகுளம் அணுமின் பணியாளர் குடியிருப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் காவலர்களின் பணி மிகவும் அவசியமானதால் தமிழக அரசு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்டி, காவலர்கள் நிம்மதியாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனித கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கூடங்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவலர் குடியிருப்பு கட்ட ஒதுக்கிய 1.11 ஏக்கரில் மனித கழிவு மேலாண்மை மையம் கட்ட பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Dinakaran ,
× RELATED கேரள அரசு பஸ் மோதி படுகாயம் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பாிதாப சாவு