*தென்னை, வாழை, பலா மரங்கள் சேதம்
கடையநல்லூர் : கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் வாழை, தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நிலங்களில் தென்னை, மா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மலை அடிவாரங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா, வாழைகளை சேதப்படுத்தி வருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காசிதர்மம் அருகே சின்னகாட்டு பகுதி, மேலக்கடையநல்லூர் மேல்கால் பரவு பகுதி, திரிகூடபுரம் பகுதிகளில் விளைநிலங்களில் யானை புகுந்து சேதப்படுத்தியது.
இந்நிலையில் நேற்று கடையநல்லூர் பெரியாற்று படுகைக்கு அருகில் உள்ள சின்னாற்று பகுதியில் விவசாயிகள் இஸ்மாயில், காஜா மைதீன், மாறன், சங்கர் ஆகியோரின் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள வேலி கற்கள் உடைத்தும், நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள், தென்னை, பலா மரங்களை சேதப்படுத்தி உள்ளது. வனத்துறையினர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வீரவநல்லூர் : நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த தெற்கு சங்கன்திரடு கிராமத்தில் 150 விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வயல்வெளிகளில் புகும் காட்டுப்பன்றிகள் வாழைக்கன்றுகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த வேலையா மகன் மணி(45) என்பவரது வயலில் புகுந்த காட்டுப்பன்றிகள் 300 வாழைக்கன்றுகளில் உள்ள குருத்து பகுதியை கடித்து தின்று சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே வனத்துறை அதிகாரிகள், அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடையநல்லூர், சேரன்மகாதேவி அருகே ஒற்றை யானை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் appeared first on Dinakaran.