×

ஆலஞ்சோலை ரேஷன்கடையில் மீண்டும் ரேஷன் பொருட்கள் பெற்ற சைக்கிள் மெக்கானிக்

*போராட்டத்திற்குப் பின் வழங்கப்பட்டது

அருமனை : ஆலஞ்சோலை கைதக்கல் பகுதியை சேர்ந்தவர் மலுக் முகமது மகன் செய்யது அலபி(55). சைக்கிள் மெக்கானிக். இவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு உட்பட்ட ஆலஞ்சோலை டி.பி.12 ரேஷன் கடையிலிருந்து நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இவர் கடந்த மாதத்திற்கு முன் ரேஷன் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது இவரது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வராததால் விற்பனையாளரிடம் கேட்டபோது நெட்வொர்க் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மே மாத ரேஷன் பொருட்கள் வாங்க சென்றபோது இவரது ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரேஷன் வழங்கப்படாது என விற்பனையாளர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செய்யது அலபி, ரேஷன் வாங்காமல் கடையிலிருந்து செல்ல மாட்டேன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரியிடம் தொலைபேசியில் புகார் செய்தார். பிரச்சனைக்கு தீர்வு காண வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரி கூறியதை தொடர்ந்து செய்யது அலபி விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார்.

ஆவணங்களை அதிகாரி சோதனை செய்து பார்த்தபோது இவரது ரேஷன் கார்டு எண் நீக்கப்பட்டுள்ளதும் திருவட்டார் தாலுகாவில் உள்ள பொன்மனை மற்றும் ஆலங்குளம் பகுதிக்கு ரேஷன் கார்டை மாற்ற கோரி விண்ணப்பித்து இருந்ததும் தெரிய வந்தது. அப்போது செய்யது அலபி நான் குடியிருக்கும் பகுதியை விட்டு எப்படி வேறு தாலுகாக்களில் விண்ணப்பிக்க முடியும், ஆலஞ்சோலை ரேஷன் கடையில் விற்பனையாளர் செய்யும் தில்லு முல்லு குறித்து நான் டிஎஸ்ஓவுக்கு புகார் செய்த காரணத்தால் போலி ஆவணங்கள் தயாரித்து நான் விண்ணப்பித்தது போன்று இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதும். இதற்கு உறுதுணையாக இருந்த வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறி அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து திடீரென விற்பனையாளர் செய்யது அலபியை அழைத்து உங்களுடைய ரேஷன் கார்டு இங்கு மீண்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து நேற்றுமுன்தினம் ஆலஞ்சோலை நியாய விலை கடையில் சென்று பொருட்களை வாங்கி உள்ளார்.

தவறு செய்தது யார்?

இவரது ரேஷன் கார்டில் எவ்வாறு மொபைல் நம்பர் மாற்றப்பட்டது? யார் இவருடைய ரேஷன் கார்டை பொன்மனைக்கு மாற்ற விண்ணப்பித்தார் என்பது குறித்து கண்டறிந்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று செய்யது அலபி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

The post ஆலஞ்சோலை ரேஷன்கடையில் மீண்டும் ரேஷன் பொருட்கள் பெற்ற சைக்கிள் மெக்கானிக் appeared first on Dinakaran.

Tags : Alancholai ration ,Alabi ,Maluk Mohammad ,Alancholai Kaitakkal ,Vilavankode Circle Distribution Office ,Alancholai TP12 Ration ,Dinakaran ,
× RELATED குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு...