×

வீராணம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது உபரி நீரை பாசனத்துக்கு திறந்து விட வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரி நீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி தற்போது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில் தற்போது 47.20 அடியை தாண்டி அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து 300 கன அடியில் இருந்து 500 கன அடி வரை உள்ளது. 950 கன அடி நீர் வீராணம் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.

சென்னை குடிநீருக்கு சராசரியாக 70 கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் உபரி நீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நேரடியாக 50 ஆயிரம் ஏக்கரும், மறைமுகமாக 50 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பாசனம் தந்து வரும் வீராணம் ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்வரை வறண்டு போன நிலையில் காணப்பட்ட வீராணம் ஏரி, தற்போது அதன் முழு கொள்ளளவை நெருங்கி இருப்பது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விவசாயிகள் போர்வெல் மற்றும் மழைநீர் மூலம் பாசனம் பெற்று வந்தாலும், பயிர் செய்து வரும் விவசாய பயிர்களுக்கு பாரம்பரிய சாகுபடி முறையான ஏரி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி பாசனம் செய்யும் போது விவசாய பயிர்களில் நோய் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

அதனால் உடனடியாக ஏரியின் உபரி நீரை அனைத்து பாசன வாய்க்கால்களிலும் திறந்து விட வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது அனைத்து பாசன மதகில் இருந்தும் நீர் கசிவு இருந்து வருகிறது. ஆனாலும் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மெட்ரோ நிர்வாகத்தினர் பாசன மதகுகளில் மண் மூட்டை கொண்டு நீர் கசிவை தடுத்து வருவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். முக்கியமாக இப்பகுதிகளில் மழையும் பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி கண்டிப்பாக பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவது மிக சரியானது எனவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

The post வீராணம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது உபரி நீரை பாசனத்துக்கு திறந்து விட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Veeranam lake ,Chettiathoppu ,Cuddalore district ,Viranam lake ,Dinakaran ,
× RELATED வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டியது