- ஆசாதியா அரசு
- சர்வதேச யோகா தினம்
- கோவில்பட்டி
- அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
- யோகா தினம்
- கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
கோவில்பட்டி : கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா தின இலச்சினை வடிவில் நின்று அசத்தினர்.
நாடு முழுவதும் இன்று(21ம் தேதி) சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா வடிவில் நின்று யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் காளிராஜ் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.திருச்செந்தூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் இந்திய யோகா ஆராய்ச்சி மையம் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி ரவீணா (10), ஆணிப்படுக்கையில் அமர்ந்து யோகா சாதனை முயற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்செந்தூர் தெய்வா மகாலில் நேற்று நடந்தது. பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாசலம், திருச்செந்தூர் கவிஞர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயன் வரவேற்றார்.தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார் யோகா சாதனை முயற்சியை தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை கல்பனா நடுவராக பணியாற்றினார். மாணவி ரவீணா, ஆணிப்படுக்கையில் அமர்ந்து 80 வகையான யோகா ஆசனங்களை செய்து அசத்தினார். சுவாமி விவேகானந்தர் யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவியின் தாய் ரம்யா நன்றி கூறினார்.
பின்னர் ரம்யா கூறியதாவது: 4 வயது முதல் ரவீணா யோகா பயிற்சி செய்து வருகிறார். இதுவரை 8 உலக சாதனை மற்றும் 12 விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஸ்கேட்டிங் செய்து மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முட்டை மீது அமர்ந்து யோகா போன்ற சாதனைகள் செய்துள்ளார். தற்போது பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு மற்றும் உலக சாதனைக்காக ஆணிப்படுக்கையில் அமர்ந்து 80 யோகாசனங்கள் செய்துள்ளார், என்றார்.
செய்துங்கநல்லூர்: கிள்ளிகுளம் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமை வகித்து பேசினார். சித்த மருத்துவ அலுவலர்கள் செல்வக்குமார், ஜன்னத் ஷரீப், முருகப் பொற்செல்வி ஆகியோர் சித்தர்களின் யோகக்கலை, எளிய யோகா பயிற்சி, அவற்றின் பலன்கள், யோகாசனம் மற்றும் மூச்சு பயிற்சி செய்முறைகள் குறித்து பேசினர். யோகா பயிற்சியும் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்பாபு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் குமார், இளஞ்செழியன், சுப்பையா ஸ்ரீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீயோகாலயா யோகா பயிற்சி மையம் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். யோகாலயா நிறுவனர் யோகா குணா, மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சியளித்து, யோகா தொடர்ந்து செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் அருள்காந்தராஜ், நன்றி கூறினார்.
சாத்தான்குளம்: பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் யோகாசனப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் பூபால்ராயன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் வரவேற்றார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் வைகுண்டரமணி சித்த மருத்துவத்தின் பயன்கள், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் குமார் மூலிகைகள் குறித்தும், யோகா கலையின் சிறப்புகள் பற்றியும் விளக்கினார். பயிற்சி சித்த மருத்துவர் ஐஸ்வர்யா யோகாசனம் குறித்த செயல்முறை விளக்கம் அளித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் மூலிகை கண்காட்சியை மாணவ- மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார். இதில் சித்த மருத்துவ மருந்தாளுனர்கள் சங்கரமணி, ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜெயபால், அருண், உடற்பயிற்சி ஆசிரியர் சேவியர், தமிழ் ஆசிரியர் ஜோசப் ததேயுஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் பூபால்ராயன், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், உடற்பயிற்சி ஆசிரியர் சேவியர் வில்சன் ஆகியோர் செய்திருந்தனர்.
The post சர்வதேச யோகா தின இலச்சினை வடிவில் நின்று அசத்திய அரசு பள்ளி மாணவிகள் appeared first on Dinakaran.