×

போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிக்கும் இருவப்பபுரம்- பழையகாயல் சாலை புதுப்பிக்கப்படுமா?

*சோலைப்புதூர் -சம்படி ரோட்டை சீரமைக்கவும் வலியுறுத்தல்

ஏரல் : சாயர்புரம் அருகே போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இருவப்பபுரம் – பழையகாயல் ரோடு மற்றும் சோலைபுதூர்- சம்படி சாலையை புதிதாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் இருவப்பபுரம் சாலையில் இருந்து சோலைப்புதூர் வழியாக பழையகாயல் செல்லும் சாலை மற்றும் சோலைப்புதூரில் இருந்து சம்படி செல்லும் சாலையில் வழிநெடுக பல கிராமங்கள் உள்ளன. இந்த சாலையின் இருபக்கத்திலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் நெல் விவசாயமும் நடந்து வருகிறது.

இதனால் இந்த இரு சாலைகளிலும் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இருக்கும். மேலும் இப்பகுதி கிராமங்களில் இருந்து சிவத்தையாபுரம் மற்றும் பழையகாயல் பள்ளிகளிலும், சாயர்புரம் பள்ளி,கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவ-மாணவிகளும்இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையானது குண்டும், குழியுமாக கற்கள் அனைத்தும் பெயர்ந்த நிலையில் இருந்து வருவதால் இருசக்கர வாகனத்தில் சென்று வரும் விவசாயிகள், மாணவ, மாணவிகள் இந்த பள்ளங்களில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் பெரும்பாலானோர் சாலையில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சிவத்தையாபுரம் அருகே போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வரும் இருவப்பபுரம் – பழையகாயல் ரோடு மற்றும் சோலைப்புதூர் – சம்படி ரோடுகளை புதிதாக போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிக்கும் இருவப்பபுரம்- பழையகாயல் சாலை புதுப்பிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Iruvappapuram-Palayakayal road ,Cholaiputhur- ,Sambadi Road ,Iruvapppuram-Palayakayal road ,Cholaiputur-Sambadi road ,Sairapuram ,
× RELATED குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு...