×

சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள பைன் பாரஸ்ட் மற்றும் தலைகுந்தா பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதிக்கு ெசல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட வனத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. வன விலங்குகள் ஒன்றிற்கு ஒன்று வாழ்விடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சண்டை போடும் நிலையில், புலி மற்றும் சிறுத்தை போன்றவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன.

இவைகள் வயது மூப்பு காரணமாக வேட்டையாட முடியாத நிலையில், மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரும் நிலையில், மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா வனத்தை ஒட்டியுள்ள பைன்பாரஸ்ட் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஒரு புலி நடமாடுவதை பலரும் பார்த்துள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புலி நடமாட்டத்ததை வீடியோ எடுத்து சமூக வெளியிட்டிருந்தனர்.

நேற்று பகல் ேநரத்திலேயே பைன் பாரஸ்ட் பகுதியில் புலி ஒன்று சாலையோரத்தில் நடமாடுவதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனை தொடர்ந்து, இரு நாட்களுக்கு தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தற்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பைன் பாரஸ்ட் பகுதி மக்கள் அதிகம் வாழும் தலைகுந்தா பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இதனால், தலைகுந்தா பகுதிக்கு புலி வரக்கூடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty Pine Forest ,Ooty ,pine forest ,Talaikunta ,Nilgiris district ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...