×

‘‘மங்கையர் போற்றும் மாங்கனித் திருவிழா’’

காரைக்கால் என்ற பட்டினத்தில் வாழ்ந்த தனதத்தன் என்பவன் வாணிபம் செய்து வந்தான். இவனுக்கு அழகே உருவாகி வந்த பூங்கொடி போன்ற ஒரு பெண், பெயர் புனிதவதி, சிவபக்தியில் மூழ்கிய இப்பெண்ணுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். பெரும் வணிகர் குழுமியுள்ள பட்டணம் நாகைப் பட்டணம். அங்கு ஒரு தனவந்தன் நிதிபதி என்பவன் இருந்தான். அவனுடைய ஒரே மகன் பரமதத்தன் என்பவனுக்கு அப்பெண்ணை திருமணம் செய்து கொடுத்தனர். அவனும் ஒரு வீடு அமர்த்திக்கொண்டு வியாபாரம் செய்யலானான். வாணிபம் நிமித்தம் காரைக்காலுக்கு வந்தபோது, இரு மாங்கனிகள் கிடைக்க, அதை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். ஒரு சிவனடியார், புனிதவதியின் வீட்டுக்குப் பசியுடன் வந்தார்.

கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்து உபசரித்தாள் புனிதவதி. மதியம் உணவருந்த வந்த கணவனுக்கு, மீதமிருந்த ஒரு மாம்பழத்தைப் பரிமாற, அது மிக சுவையுடன் இருப்பதை அறிந்து, இரண்டாவது மாம்பழத்தையும் கொண்டு வருமாறு கேட்டான். ‘அந்த ஒரு பழத்தைத் தான் சிவனடியாருக்குக் கொடுத்துவிட்டேனே. இறைவா, நான் என் செய்வேன்’ என அச்சமுற்று சிவனை வேண்டினாள்.

அவள் கையில் ஒரு மாம்பழம் குதித்தது. மிக்க மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு போய், பரமதத்தனுக்குக் கொடுக்க, அபூர்வமாக அதன் ருசி இருப்பதைக் கண்டு, ஐயமுற்று வினவ, புனிதவதி நடந்தது நடந்தபடி கூறினாள். அவள் பேச்சை நம்பாத அவன், ‘அப்படியானால் மற்றுமொரு மாம்பழம் இறைவனிடம் கேட்டு வாங்கிவா’ என்றான். புனிதவதி, இறைவனை வேண்ட மீண்டும் அவள் கையில் ஒரு பழம் தோன்ற, அதைப் பரமதத்தன் கையில் எடுத்தவுடன் அப்பழம் மறைந்தது. அச்சம் மிகக் கொண்டான் அவன். இப்புனிதவதி சாதாரணப் பெண் அல்லள், தெய்வாம்சம் கொண்ட சக்தி வடிவம் எனப் பயந்து, வீட்டைவிட்டு வெளியேறினான்.

மதுரையம்பதி சென்ற பரமதத்தன், அங்கு வேறொரு பெண்ணை மணந்து, இல்லறம் நடத்தினான். அதன் பயனாக, அவனுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தன் மனைவியை தெய்வமாக நினைத்தான். ஆதலால் அக்குழந்தைக்கு, புனிதவதி என்று பெயர் சூட்டினான். பரமதத்தன் வேறொரு பெண்ணுடன் வாழ்வு நடத்துவதைப் புனிதவதியாரின் சுற்றத்தார் அறிந்து, அதனை அவர்க்குக் கூறினர். அவர் மிகவும் வருந்தினார். சுற்றத்தார் அவரைப் பரமதத்தனிடம் கொண்டுவிடுவதே முறை என்று அவனிடம் அழைத்துச் சென்றார். பரமதத்தன் அச்சம் மிகக் கொண்டான். தெய்வாம்சம் நிறைந்த தன் மனைவியைக் கண்ட பரமதத்தன், அந்தப் பெண்மணியின் அடிகளில் விழுந்து வணங்கி, ‘‘நான் உன்னை தெய்வமாக மதிக்கின்றேன். அதனால் என் குழந்தைக்கு உன் பெயரையே சூட்டியுள்ளேன்’’ என்றான்.

கணவன் தன்னடியை வணங்கியதால் மிகவும் கலக்கம் அடைந்தார் புனிதவதி. அவருடைய சுற்றத்தார், ‘‘நீ உன் மனைவியை வணங்குவது ஏன்?’’ என வினவினர். ‘‘இவர் மனிதப் பிறவியினர் அல்லர். தெய்வம் ஆதலால் இவரை நீங்களும் வணங்குங்கள்!’’ என்றான் பரமதத்தன். உறவினர்கள் வியப்பு அடைந்தனர். இந்நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்;

‘‘மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு
பெற்றஇம் மகவு தன்னைப் பேரிட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்கின் என்றான்’’

என்று இவ்வாறு பரமதத்தன் கூறவும், உறவினர் ‘இஃது என்ன?’ என்று ஒன்றும் தோன்றாமல் நின்றனர். மணம் தங்கிய கூந்தலையுடைய புனிதவதி அம்மை, யாரும் கணவன் பரமதத்தன் கூறிய சொல்லைக் கேட்டு, சிவபெருமானின் பொற்பாதங்களை வணங்கித் துதித்து மனம் ஒன்றிய அகநோக்கின் மிக்க உள் உணர்ச்சியை மேற்கொண்டு சொல்லலானார்.‘‘இறைவா! இங்கு இவ்வணிகன் தன் மனத்தில் கொண்ட கொள்கை. இது இனிமேல் இவனுக்காகத் தாங்கிய வனப்பு மிக்க தசை பொதிந்த சுமையை இங்குக் கழித்துவிட்டு உன்னிடத்து அவ்வுலகத்தில் நின் அடிகளைப் போற்றும் பேய் வடிவத்தை அடியவளான எனக்கு நற்பாங்கு கொள்ள அருள வேண்டும்’’ என்று வேண்டி இறைவனின் அடிகளைத் துதித்து நின்றார்.

‘‘ஈங்கிவன் குறித்த கொள்கை இது, இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங்குன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர், தான் பரவி நின்றார்.’’ இங்ஙனம் புனிதவதி அம்மையார் வணங்கி நின்றபோது, அம்பலத்தில் ஆடுபவரின் அருளால், மேலான நெறி தரும் உணர்வு மிகுதலால், தாம் வேண்டிய அதையே பெறுவாராகி, உடம்பில் தசையும் அதனை இடமாகக் கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, எலும்புக்கூடான உடலே தம் மேனியாகிட, மேல் உலகமும், மண் உலகமும் எல்லாம் வணங்கத்தக்க பேயான சிவகண நாதரின் வடிவம் உள்ளவர் ஆனார். இந்நிகழ்வை சேக்கிழார் பெருமான் மெய் சிலிர்த்துப் பாடுகிறார்.

‘‘ஆன அப் பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை எல்லாம் உதறி எற்புடம்பே யாக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்’’

அப்போது எங்கும் மலர்மாரி பொழிந்தது. தெய்வ துந்துபிகள் முழங்கின. தேவர்களும் முனிவர்களும் போற்றி மகிழ்ந்தனர். உள்ளே தோன்றி மேல் எழுந்த ஒருப்பட்ட நாணத்தால் தையல் பாகரான சிவபெருமானைத் துதித்து ‘அற்புதத் திருவந்தாதியை அப்போதே பாடி அருளத் தொடங்கி, ‘‘அழகிய சிவந்த பாத தாமரைகளைப் போற்றுகின்ற நல்ல சிவ பூதங்களுள் நானும் ஒன்றாயினேன்’’ என்று விரும்பியபடி மகிழ்ச்சியோடு பாடினார் காரைக்காலம்மையார்.

அதன் பின்பு சிறப்புடைய இரட்டை மணிமாலையையும் அந்தாதித் தொடையாக அமையப் பாடினார். பின்னர், கயிலாய மலையைப் போய் அடையும் பொருட்டு வாய்ப்பான பொருள் முன்னே கூடுதலால் வழிபடுகின்ற வழியால் வந்தார். அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட பேய் வடிவத்தைக் கண்டவர் வியப்படைந்து அச்சம் கொண்டு அங்கிருந்து நீங்கி ஓடலாயினர். வடதிசையில் உள்ள நாடுகளை எல்லாம் மனோ வேகத்தைவிட அதிக வேகமாகக் கடந்து சென்று, திருக்கயிலை மலையின் பக்கத்தை அடைந்து அங்குக் காலால் நடந்து செல்வதை விட்டு நிலத்தின் மேல் தலையால் நடந்து சென்றார்.

அப்போது உமையம்மை, ‘அம்மையை’ ‘யார்’ எனக் கேட்க எம்பெருமான், ‘‘இவள் நம்மைப் பேணும் அம்மையே ஆவாள். இந்தப் பேய் வடிவத்தை நம்மை வேண்டிப் பெற்றுக் கொண்டார்!’’ என்றார். அப்போது காரைக்கால் அம்மையார் பக்கத்தில் நெருங்கவே இறைவன் அவரைப் பார்த்து ‘நம் அம்மையே வருக’ என்ற செம்மை தரும் ஒப்பில்லாத ஒரு சொல்லை உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அருளினார்.

திருப்பாதங்களில் பணிந்து விழுந்து எழுந்து நின்ற அன்னையைப் பார்த்து மகிழ்வுடன்,’’ என்று கேட்க, ‘‘எக்காலத்து கெடுதல் இல்லாத இன்ப அன்பை வேண்டிக் கொண்டு,’’ பின்னும் வேண்டுவாராய், ‘‘இனி நான் பிறவாதிருக்கும் வரம் வேண்டும். மீண்டும் பிறவி உள்ளதாயின் உன்னை என்றும் மறவாதிருக்கும் வரம் வேண்டும். ஐயனே! நான் மேலும் வேண்டுவது
தேவரீர் அருட்கூத்து ஆடும் போது மகிழ்ச்சி யுடன் பாடிக்கொண்டு உன் திருவடியின் கீழ் இருக்கும் பேறு வேண்டும்!’’தம் திருவடியின் கீழ் கூடியிருக்கும் பேற்றை அருளித் துதிக்கின்றவர்களுக்குப் பற்றுக் கோடாய் நிற்கும் இறைவர், ‘அம்மையே’ விளக்கமுடைய தெற்குத்திக்கில் எப்போதும் அழியாத வாழ்வு தரும். பழையனூர் என்னும் பழம்பதியில் நிலவும் திருவாலங்காட்டில் நாம் ஆடும் பெருங்கூத்தை நீ கண்டு எப்போதும் ஆனந்தத்துடன்கூடி நம்மைப் பாடிக்கொண்டிருப்பாயாக!’’ என அருளினார்.

அதன்படி அம்மையார் திருவாலங்காடு வந்து, ‘கொங்கை திரங்கி என்றும் எட்டி இலம் ஈகை’ என்று துவங்கும் மூத்த திருப்பதிகங்களைப் பாடினார். தொடர்ந்து ஈசனின் பொற்பாத நிழலில் திருநடனம் கண்டவாறு என்றென்றும் வீற்றிருக்கும் ேபறு பெற்றார். ஐம்பொன் விக்கிரக வடிவில் காட்சி தருகிறார்! இவரின் சிவபக்தியையும் மாங்கனியின் மூலம் இறைவன் நிகழ்த்திய அருளாடலையும் சிறப்பிக்கும் விதமாக காரைக்காலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது மாங்கனித் திருவிழா! மங்கையர் போற்றும் மகத்தான திருவிழா இது! காரைக்கால் திருத்தலத்தில் ‘மாங்கனித் திருவிழா’ நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விநாயகர் பூஜையுடன் விழா துவங்கும். அன்று இரவு பரமதத்தரை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை அழைக்கும் வைபவம் நடைபெறும்.

இரண்டாம் நாள், புனித வதியார் தீர்த்தக் கரையில் எழுந்தருள, பரமதத்தர் கல்யாண மண்டபம் வர, தொடர்ந்து புனிதவதியார் – பரமதத்தன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று மாலை அருள்மிகு பிட்சாடனருக்கு வெள்ளை சாத்தி புறப் படும் வைபவம். அப்போது பரமதத்தர் – புனிதவதி தம்பதியினர் முத்து சிவிகையில் திருவீதி உலா வருவர்.மூன்றாம் நாள் அதிகாலை 3.00 மணியளவில் மகா அபிஷேகம். உதயாதி நாழிகையில் அழகிய அலங்காரத்துடன் பிச்சைப் பாத்திரத்தில் மாங்கனி ஏந்தி சுந்தர மூர்த்தியாகக் காட்சி தரும் இறைவனை தரிசிப்பது அளவற்ற புண்ணியம் தரும். சுமார் எட்டு மணியளவில் பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு வரும் வியாபாரிகள் இருவர் இரண்டு மாங்கனிகளை பரமதத்தருக்கு தருதல். அவற்றை பரமதத்தர் தன் வீட்டுக்குக் கொடுத்தனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நான்காம் நாள் விழாவின் முக்கிய வைபவம். ஆனி பௌர்ணமியன்று காலை சுமார் பத்து மணியளவில் துவங்கும் அடியார் கோலத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்து புனிதவதியாரின் திருமாளிகைக்கு பிச்சைக்காக எழுந்தருளிவார் இறைவன் வேத கோஷங்களுடன் பிட்சாடனராக உலாவரும் இறைவனுக்கு மாங்கனி படைக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இறைவன் பிட்சைக்கு வரும் போது தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. மாங்கனி மட்டுமே சமர்ப்பிக்கப்படும். வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் வீட்டுக் கூரையின் மீதிருந்து கூடை கூடையாக மாங்கனிகளைக் கொட்டுவார்கள். இந்தக் கனிகளை உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாங்கனி பெற மக்கள் அலைமோதுவார்கள்.

ஊர்வலம் முடிந்து அம்மையார் இல்லம் வந்து சேரும் சிவனடியாரை வரவேற்று, அமுது படைக்கும் வைபவம் நிகழும். தயிர் சாதம், மாங்கனி, இனிப்புகள் மற்றும் தின் பண்டங்கள் அடங்கிய மகாநைவேத்தியம் படைக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப் படும். இதைத் தொடர்ந்து, பரமதத்தர் உணவருந்தவருதலும், புனிதவதியார் மாங்கனி வரவழைக்கும் அற்புதமும், இதைக் கண்டு பயந்து பரமதத்தர் பாண்டிய நாடு செல்லும் வைபவமும் நிகழும் (அதாவது ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தை அடைகிறார்).

பௌர்ணமியன்று இரவு பரமதத்தருக்கு 2-ம் திருமணம் நடைபெறும். தொடர்ந்து புனிதவதி அம்மையார் இங்கு எழுந்தருள்வார். மறுநாள் அதிகாலை 4 மணியளவில் புனிதவதியார் பேயுரு ஏற்று அற்புத திருவந்தாதி மற்றும் இரட்டை மணி மாலை பாடியபடி கயிலாயத்துக்கு எழுந்தருள அம்மையின் நாமம் காரைக்காலம்மையார் என்றாகிறது.மாலை 5 மணிக்கு அருள்மிகு கைலைநாதர் திருக்கோயில் முன் பஞ்ச மூர்த்திகளும் அம்மையாருக்குக் கயிலைத் திருக்காட்சி அருளுகின்றனர். பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வருவர். அன்று மாலையில் காரைக்காலம்மையாரின் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து கலந்து கொள்ளுவது காணக் கண் கொள்ளாக்காட்சி.

ஆர்.சந்திரிகா

 

The post ‘‘மங்கையர் போற்றும் மாங்கனித் திருவிழா’’ appeared first on Dinakaran.

Tags : Manganith festival of Mangaiyar ,Dhanadatta ,Karaikal ,Punitavathi ,Shiva ,Manganith festival in honor of Mangaiyars ,
× RELATED காரைக்கால் அம்மையார்-பரமதத்தர்...