×

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.101 கோடியில் திட்ட பணிகளுக்கு தீர்மானம்

திருவொற்றியூர்: மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.101 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மணலி மண்டலக்குழு கூட்டம், தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர்.

இதில் தீர்த்தி பேசுகையில், தூய்மை பணியாளர்கள் குறைவாக இருப்பதால் குப்பையை முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது என்றார். ஸ்ரீதர் பேசுகையில், மணலியில் மின்பழுது ஏற்பட்டால் சுமார் 5 கி.மீ. தூரம் உள்ள மணலி புதுநகர் மின்வாரியத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டி இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அலுவலர்கள் புகார்கள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.
ராஜேந்திரன் பேசுகையில், சடையன்குப்பம் அருகே தனியார் நிறுவனத்தினர் இறால் கழிவுகளை சாலையோரம் கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்றார்.

ஜெய்சங்கர் பேசுகையில், எனது வார்டில் அனுமதி இல்லாமல் ரசாயன தொழிற்சாலைகள் ஏராளமாக செயல்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றார். காசிநாதன் பேசுகையில், மாத்தூர், மஞ்சம்பாக்கம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள காயலான் கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்றார்.
நந்தினிசண்முகம் பேசுகையில், தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நாய்களுக்கு கருத்தடை செய்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விட வேண்டும் என்றார்.

முல்லை ராஜசேகர் பேசுகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மணலி காமராஜ் சாலை – பாடசாலை சந்திப்பில் தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு மண்டல தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பதில் அளித்து பேசுகையில், மக்கள் பிரச்னை தொடர்பான கவுன்சிலர்களின் புகார்களை அதிகாரிகள் உடனுக்குடன் சரி செய்து தர வேண்டும், என்றார். இதனைத் தொடர்ந்து அனைத்து வார்டுகளை உள்ளடக்கி ரூ.101 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு 166 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.101 கோடியில் திட்ட பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Manali Zonal Committee ,Tiruvottiyur ,AV Aramugam ,Zonal ,Commissioner ,Govindarasu ,Executive ,Devendran ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...