×

சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க சென்னை மாநகருக்கு 22 அதிகாரிகள் கொண்ட குழு

சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், சரக்கு போக்குவரத்து திட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசு முயற்சித்து வருகிறது. அந்தவகையில் சென்னை நகருக்கான சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க 22 அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து தொழில்துறை செயலர் அருண்ராய் வெளியிட்டுள்ள அரசாணையில், “மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, 2 பெருநகரங்களில் சரக்கு போக்குவரத்தை எளிமையாக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

அதனை தொடர்ந்து 2022 பிப்ரவரி 24ம் தேதி தலைமை செயலர் தலைமையில், மாநில அளவில் சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் சென்னை நகர பகுதியில் சரக்கு போக்குவரத்தை எளிமையாக்குவது தொடர்பான திட்டம் தயாரிக்கவும், இதற்கான குழு உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், ஒருங்கிணைப்பு குழு அமைப்பதற்கான பரிந்துரையைச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (சியுஎம்டிஏ) சிறப்பு அதிகாரி அரசுக்கு அனுப்பினார்.

அதோடு குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் விவரங்களையும், அவர்களின் பொறுப்புகளையும் குறித்து தெரிவித்திருந்தார். இதனை பரிசீலித்த தமிழக அரசு, சியுஎம்டிஏ கண்காணிப்பின் கீழ், சென்னை நகர சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க அனுமதியளித்தது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக சியுஎம்டிஏ-ன் தலைவரும், குழுவின் உறுப்பினர்களாக டிட்கோ மேலாண் இயக்குனர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளின் இணை ஆணையர்கள், சென்னை வடக்கு போக்குவரத்து மற்றும் தெற்கு போக்குவரத்து இணை ஆணையர்கள், சென்னை துறைமுக பொறுப்புக்கழக துணை தலைவர் உட்பட 22 அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 6 மாதங்களில் இது குறித்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதோடு சரக்கு போக்குவரத்து கூட்டமைப்புகளின் உறுப்பினர்கள், நிபுணர்கள், சரக்குகளை வைப்பதற்கான கிடங்குகள் அளிப்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள் போன்றார் இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள். இந்த குழுவின் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் எனவும், தேவைப்படும் நேரங்களிலும் கூட்டம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க சென்னை மாநகருக்கு 22 அதிகாரிகள் கொண்ட குழு appeared first on Dinakaran.

Tags : Chennai City ,CHENNAI ,Tamil Nadu ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...