×

ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடையாறு முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகள் தீவிரம்: இம்மாத இறுதிக்குள் முடிவடையும், நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: அடையாறு முகத்துவாரப் பகுதியில் ரூ.11 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே துவங்கும் அடையாறு ஆறு 42.5 கிலோ மீட்டர் பயணித்து சென்னை, பட்டினப்பாக்கம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல்வேறு ஏரிகளின் உபரி நீர் மட்டுமின்றி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீரும் கலந்து வருகிறது.

இந்த அடையாறு ஆற்றை சீரமைப்பதற்கான பணிகள் சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அடையாறு முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் அதிகளவில் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ள காலத்தில் மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தபோது, அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

முகத்துவார அடைப்பால் வெள்ளநீர் வெளியேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தென் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மழை ஓய்ந்த பிறகே வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பும், மணல் திட்டுகள் மற்றும் காற்றினால் 7 அடி வரை எழுந்த அலைகளால் மழை நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்ப்பட்டது. இந்நிலையில் நீர்நிலைகள் மற்றும் முகத்துவாரங்களில் நீர்வளத்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி அடையாறு முகத்துவாரப் பகுதியை தூர்வாருவதற்காக ரூ.11 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரி கூறியதாவது: அடையாறு முகத்துவாரப் பகுதியில் மணல் திட்டுகள், தாவரங்கள் அதிகளவில் உள்ளதால் அடையாறு வழியாக கடலுக்கு செல்ல வேண்டிய வெள்ள நீர் தடை ஏற்படுகிறது. அடையாறு முகத்துவாரப் பகுதிகளில் 400 மீட்டர் தூரத்திற்கு கடல் மற்றும் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் சீனிவாசபுரம் பகுதியான 100 மீட்டருக்கு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஏற்படும் அடைப்புகளை தூர்வாருவதற்காக தேசிய கடல் தொழில்நுட்ப கல்வியியல் நிறுவனம் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 3 நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஆமைகள் குஞ்சி பொரிக்கும் காலம் என்பதால் ஆமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மே மாதம் முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருவிக பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் பருவமழைக்கு முன்பு முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* அடையாறு ஆறு தூர்வாரும் பணிக்காக, தேசிய கடல் தொழில்நுட்ப கல்வியியல் நிறுவனம் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

* திருவிக பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

* முகத்துவாரப் பகுதிகளில் 400 மீட்டர் தூரத்திற்கு கடல் மற்றும் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

* சீனிவாசபுரம் பகுதியான 100 மீட்டருக்கு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடையாறு முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகள் தீவிரம்: இம்மாத இறுதிக்குள் முடிவடையும், நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adyar estuary ,water resources department ,CHENNAI ,Adyar ,Manimangalam ,Kanchipuram district ,Chennai, Pattinappakkam ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை குறித்து பேச்சு நடத்த இடமளிக்கக்கூடாது: டிடிவி தினகரன்