×

ஏரிகளில் மண் திருட்டை தடுக்க மக்கள் வலியுறுத்தல்

காரிமங்கலம், ஜூன் 21: காரிமங்கலம் பகுதியில் ஏரிகளில் அதிகரித்து வரும் மண் திருட்டை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், 35க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறை வசமுள்ள இந்த ஏரிகளில் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், பல்வேறு ஏரிகளில் மண் திருட்டு, அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள கரகப்பட்டி ஏரி, வெள்ளாளன் குட்டை ஏரி ஆகியவற்றில் மண் அதிகளவில் திருடப்பட்டதால், இந்த ஏரிகள் பள்ளத்தாக்குகளாக மாறிவிட்டது.

இதேபோல் மொட்டலூர் ஏரி, நரியனஅள்ளி ஏரி, செல்லமாரம்பட்டி ஏரி, பூனாத்தனஅள்ளிபுதூர் ஏரி உள்பட பல்வேறு ஏரிகளில் மண் திருட்டு நடந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் ஏரியில் நிரம்பினால், ஏரிக்கு செல்லும் பொது மக்கள், குழந்தைகள் என பலரும் ஏரிகளில் மூழ்கி பலியாகும் அபாயம் உள்ளது. எனவே, ஏரிகளில் நடந்து வரும் மண் திருட்டை தடுத்து நிறுத்துவதுடன், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏரிகளில் மண் திருட்டை தடுக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Public Works Department ,Local Government Department ,Dinakaran ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை