×

லஞ்ச ஒழிப்பு சோதனை சார்பதிவாளர் வீட்டில் மண்ணில் புதைத்த ரூ.12 லட்சம் சிக்கியது: 80 சவரன் நகையும் பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நிலம் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் விஜிலென்ஸ் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அதிரடியாக காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கு ஏதும் பணம் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? முறைகேடான ஆவணங்கள் உள்ளதா? ஒரே நாளில் எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

நள்ளிரவு 12 மணி வரை நடந்த ரெய்டில் அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து, வேலூர் அடுத்த கீழ்வல்லம் பகுதியில் உள்ள காட்பாடி சார்பதிவாளர்(பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான வீட்டில் நேற்று காலை முதல் விஜிலென்ஸ் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து கணக்கில் வராத 80 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வீட்டின் பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மண்ணை தோண்டியது போன்று இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த விஜிலென்ஸ் போலீசார் அந்த இடத்தில் தோண்டி பார்த்தனர். இதில் பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நேற்று மாலை 6 மணி வரை நடந்த இந்த சோதனையில் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை விஜிலென்ஸ் போலீசார் சேகரித்து கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நித்தியானந்தம் பணியில் இருந்தபோது, மேற்கொண்ட பத்திர பதிவு விவரங்களை சேகரித்து முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லஞ்ச ஒழிப்பு சோதனை சார்பதிவாளர் வீட்டில் மண்ணில் புதைத்த ரூ.12 லட்சம் சிக்கியது: 80 சவரன் நகையும் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Savaran ,Vellore ,Gadpadi, Vellore district ,Vellore Vigilance Police ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு