×

பிற்படுத்தப்பட்டோர், தலித்களுக்கு பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா: இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்திய பீகார் அரசின் சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். கடந்த ஆண்டு மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்பட்டது. அப்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தப்படும் என நிதிஷ்குமார் அறிவித்தார்.

அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 30 ல் இருந்து 43 சதவீதமாகவும், தலித்களுக்கு 13 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு 2 சதவீதமாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் என மொத்தம் 75 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை கொண்டுவருவதற்கான மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. இட ஒதுக்கீட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நேற்று பாட்னா உயர் நீதிமன்றம் அளித்தது. அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை அதிரடியாக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், 65 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டு பீகார் பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16வது பிரிவின் விதிகளை 65 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மீறுவதாக உள்ளது என்றும் கூறி அவற்றை ரத்து செய்துள்ளது.

The post பிற்படுத்தப்பட்டோர், தலித்களுக்கு பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna High Court ,Patna ,Bihar government ,Nitish Kumar ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...