×

‘பாஜவில் பயணிக்க முடியாது… சுயமரியாதை முக்கியம்’ அண்ணாமலைக்காகத்தான் தமிழிசையை விமர்சித்தேன்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பகீர் பதிவு

திருச்சி: அண்ணாமலைக்காக்கத்தான் தமிழிசையை தாக்கி பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். பாஜ ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா சிவா, கடந்த 2022ம் ஆண்டு பாஜ சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் செல்போனில் மிக கடுமையாகவும், ஆபாசமாகவும் பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. இது தொடர்பாக இருவரிடமும் மாநில தலைவர் அண்ணாமலை அமைத்த குழு விசாரணை நடத்தியது.

இந்த சர்ச்சையை அடித்தளமாக கொண்டு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி நவம்பர் 2022ல் இருந்து 6 மாதம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சூர்யா சிவா நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை மீது குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமனை சூர்யா விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை ரகசியங்களை வெளியிட போவதாக கூறினார். அதிமுகவில் சூர்யா இணைய போவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சில மாதங்களுக்கு பிறகு கட்சியில் இணைக்கப்பட்ட அவருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கொடுத்த பேட்டியில், ‘கட்சியில் சமூகத்தில் அதிகளவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவி வகித்து வருகின்றனர். எனவே அவற்றை தவிர்த்து கட்சிக்காக இன்னும் கடுமையாக உழைக்க கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம், அங்கீகாரம் கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

குறிப்பாக அண்ணாமலை தலைவரான பிறகுதான் ரவுடிகள் கட்சியில் அதிக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளித்து திருச்சி சூர்யா எக்ஸ் வளைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டது தங்களுடைய பரிந்துரையில் மாநில தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான். கட்சியின் வளர்ச்சியையும், தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்க முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது’ என்று கூறியிருந்தார்.

இதனால் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆதரவாளர்கள் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் விஸ்வரூபம் ஆன நிலையில், அண்ணாமலை மற்றும் தமிழிசை டெல்லி மேலிடம் கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்றுமுன்தினம் பாஜவின் மைய குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் ஆதாரமின்றி தலைவர்கள் மற்றும் தலைமை மீது குற்றச்சாட்டு வைக்கும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாஜவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வௌியிட்ட அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இதேபோல் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய பாஜ சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கல்யாண ராமனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி சிவா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வௌியிட்டுள்ள பதிவில், ‘அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு நான் பாஜவில் இணைந்தேன். என்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன். அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்.

எந்த நிலையிலும் அண்ணன் குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது’ என தெரிவித்துள்ளார். திருச்சி சூர்யா சிவா தொடர்ந்து 2 வது முறையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இரண்டு முறையும் நீக்கப்படுவது பெண்களால் தான். ஒருவரை ஆபாசமாக பேசியதால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக நீக்கப்பட்டார். முன்னாள் மாநில தலைவரை விமர்சித்ததால் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘பாஜவில் பயணிக்க முடியாது… சுயமரியாதை முக்கியம்’ அண்ணாமலைக்காகத்தான் தமிழிசையை விமர்சித்தேன்: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா பகீர் பதிவு appeared first on Dinakaran.

Tags : BAJA ,TRICHI SURYA BAHIR ,Trichy ,Trichi Surya ,Annamalaikaka ,Trichi Surya Shiva ,State Secretary ,BajaOBC Team ,Bajaj Minority Division ,Daisy ,Bajaj ,Tirichi Surya Bakir ,
× RELATED பெண் காவலரை தரக்குறைவாக பேசிய பாஜ நிர்வாகி கைது