×

நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை வெப்ப வாதத்தால் 40000 பேர் பாதிப்பு: 110 பேர் உயிரிழந்த பரிதாபம்

புதுடெல்லி: நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வருவதால், 40 ஆயிரம் பேருக்கு வெப்ப வாதம் ஏற்பட்டுள்ளது. 110 பேர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் உயிரிழந்துவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய வெப்ப அலையின் தாக்கம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இன்னமும் நீடிக்கிறது. இந்த வரலாறு காணாத வெப்ப அலையால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. வெப்பஅலையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இது பற்றிய புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார துறையின் தேசிய நோய் கட்டுப்பட்டு மையம் நேற்று வெளியிட்டது.

அதன் விவரம்: நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக கடந்த மார்ச் 1ம் தேதி முதல் கடந்த 18ம் தேதி வரை மொத்தம் 110 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உ.பியில் 36 பேர் பலியாகி உள்ளனர். இது தவிர பீகார், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தரவுகளின்படி, ஜூன் 18 அன்று மட்டும் வெப்பத் தாக்குதலால் 6 பேர் இறந்துள்ளனர். மேலும், 40 ஆயிரம் பேருக்கு வெயில் தாங்காமல் வெப்ப வாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அரசுக்கு இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், பல மாநிலங்களில் இருந்து இன்னமும் தரவுகள் வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கையும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இன்னமும் அதிகமாகும் என்று ஒன்றிய சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே வெப்பம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை பிரிவுகள் அமைக்க என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள நிலைமையை சமாளிப்பதற்கு அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நட்டா கேட்டுக் கொண்டார்.

The post நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை வெப்ப வாதத்தால் 40000 பேர் பாதிப்பு: 110 பேர் உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : heat wave ,New Delhi ,Union Government ,India ,
× RELATED பாகிஸ்தானில் வெப்ப அலை: 4 நாளில் 450 பேர் பலி