×

பருவ மழை பேரிடரை எதிர்கொள்ள நிலையான வழிகாட்டு முறையை அனைத்து துறைகளும் வெளியிட வேண்டும்: தலைமை செயலாளர் அறிவுரை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தென்மேற்கு பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர், இந்தாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு இயல்பாக அல்லது இயல்பை விட சற்று கூடுதலாக இருக்கும். குறுகிய காலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை அவ்வப்போது ஏற்படும் என்று கூறினார்.

இதையடுத்து கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அவர் பேசியதாவது: பேரிடர் காலத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல் துறையில், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்றுள்ள காவல் துறை அலுவலர்கள் கண்டறிந்து, அவர்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மீட்பு பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ளும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினை தேவையான இடங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ள நீர் தேங்கும் நேர்வுகளில் பாதிப்பிற்கு உள்ளாகும் முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர்களையும், மின்சார கட்டமைப்புகளையும் உயரமான இடத்தில் வைக்க வேண்டும். பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பெட்ரோல், டீசல் கிடைக்கப் பெறும் வகையில் வாகனங்கள் மூலம் எரிபொருள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று தடையில்லா செல்பேசி இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும். பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒரு நிலையான வழிகாட்டு நடைமுறையினை தயார் செய்து வெளியிட வேண்டும்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பேரிடர் அனுபவங்களை கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும், தன்னார்வலர்களைக் கண்டறிந்து, அவர்களை பேரிடர் காலங்களில் ஈடுபடுத்தும் வகையில், உரிய பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள், காவல் துறை, ராணுவம், விமானப்படை, கப்பல்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புபடை உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்களும், தொலைதொடர்பு துறை, எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பருவ மழை பேரிடரை எதிர்கொள்ள நிலையான வழிகாட்டு முறையை அனைத்து துறைகளும் வெளியிட வேண்டும்: தலைமை செயலாளர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Sivdas Meena ,South West ,Chennai Chief Secretariat ,Chennai Zonal Meteorological Research Center ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...