×

ஒரு பாக்கெட் சாராயம் ரூ.60: சப்ளை செய்தது எப்படி? திடுக் தகவல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி என்பது கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட நீதிமன்றம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் முக்கிய இடத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் அதிகளவில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாராயம் விற்பனை ஜரூராக நடைபெற்று வந்துள்ளது. கருணாபுரம் குடியிருப்பு பகுதியில் மையப் பகுதியில் அதிகளவில் வீடுகள் இருக்கும் இடத்தில் தனியாக மூன்று இடங்களில் வீடுகள் வைத்துக் கொண்டு ஒரு இடத்தில் புதுச்சேரி மற்றும் கல்வராயன் மலையில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை பதுக்கி வைப்பதற்காகவும், மற்றொரு வீட்டில் சாராயத்தை பாக்கெட் போட்டு வைத்து அதனை மற்றொரு வீட்டில் விற்பனைக்காக கொண்டு சென்று கருணாபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் கூலி தொழிலாளிகள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளிகள் என்பதால் வேலைக்கு சென்று திரும்பியவுடன் சாராயம் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். விஷ சாராயம் குடித்து 42 பேர் பலியானதை அடுத்து இந்த 3 வீடுகளும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. வீட்டில் இருந்த சாராயம் கலப்பு இயந்திரங்கள் மற்றும் முக்கிய ரசாயன கலவைகளை இரவோடு இரவாக எடுத்து கொண்டு கும்பல் தப்பி சென்றுள்ள நிலையில் அந்த இடத்தை தற்போது காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கோவிந்தராஜன் என்ற கன்னுக்குட்டி, அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன் ஆகியோர் கடந்த 2 வருடங்களாக அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பாக்கெட் ரூ.40, ரூ.50, ரூ.60 வரை விற்கப்பட்டுள்ளது. ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கன்னுக்குட்டி சாராயத்தை விற்பனை செய்ததால் விவகாரம் வெளியே தெரியாமலேயே இருந்துள்ளது. இதற்காக கருணாபுரத்தில் தெருவுக்கு ஒரு ஏஜென்ட் பிடித்து பாக்கெட் சாராயத்தை விற்றதும் தெரியவந்துள்ளது.

* 70 வழக்கில் தொடர்புடைய வியாபாரி சின்னத்துரை மாயம்
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவர்தான் சாராய விற்பனையில் மொத்த வியாபாரியாக செயல்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே 70 வழக்குகள் உள்ளன. விஷ சாராயத்திற்கு பலரும் பலியானது தெரிந்து சின்னத்துரையும் அவருக்கு துணையாக இருந்த 10 பேரும் மாயமாகிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கு சிபிசிஐடி போலீசார் வலைவிரித்துள்ளனர். சின்னத்துரையிடம் 20க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாராய பாக்கெட்களை வாங்கி சென்று கருணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்கள் யார், யார் என்கிற பட்டியலையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர்.

* சுடுகாடு அருகில் விஷசாராயம் விற்பனை: எப்ஐஆரில் பரபரப்பு தகவல்
விஷ சாராயம் பலி தொடர்பாக பதியப்பட்டுள்ள எப்ஐஆர் விவரம் வருமாறு: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவர் அளித்த புகாரில், ‘எனது அப்பா சேகர் விவசாய கூலி வேலையும், மாட்டு தரகராகவும் வேலை செய்து வந்தார். என் அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார். எங்க ஊரை சேர்ந்த கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன், மற்றும் கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோர் கடந்த சில நாட்களாக எங்க ஊர் சுடுகாட்டுக்கு அருகில் சாராயம் விற்று வந்தனர். இதை எனது தந்தை வாங்கி குடித்த நிலையில் வயிறு வலிப்பதாக, வாந்தி வருவதாக கூறினார்.

பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனது அப்பா மற்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த நபர்கள் இறப்பிற்கும், உடல்நல பாதிப்படையவும் காரணமாக இருந்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார். அதன் மீது கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டி, அவரது தம்பி தாமோதரன், கன்னுக்குட்டி மனைவி விஜயா ஆகியோர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல் (328), மரணம் விளைவித்தல் (304-II), 4 (1) (i), 4(1-ஏ) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிந்துள்ள போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

* உடல் வலியை போக்க சாராயம் குடித்த தம்பதி பலியான சோகம்: கண்ணீருடன் தவிக்கும் குழந்தைகள்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தம்பதியான சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) ஆகியோர் விஷ சாராயம் குடித்து பாிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்த நிலையில், ஹரி(14), ராகவன்(13) என்ற 2 மகன்களும், கோகிலா (16) என்ற மகளும் உள்ளனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தம்பதி உடல்வலியை போக்குவதற்காக வழக்கமாக மதுகுடிப்பது வழக்கம். அதேபோல் 18ம்தேதி வேலையை முடித்துவிட்டு திரும்பிய தம்பதியர் உடல்வலியை போக்குவதற்காக இரவு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டில் படுத்திருந்த தம்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் 3 குழந்தைகளும் அனாதையாக நேற்று இறுதிச் சடங்கின்போது சோகத்துடன் நின்ற அவர்களை உறவினர்கள் ஆறுதல்படுத்தினர்.

* மெத்தனத்தால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை உயிரை காக்க அரசு முன்னுரிமை: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
கள்ளக்குறிச்சியில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷசாராயம் குடித்து இறந்த சம்பவம் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. நம் முதல்வர் அவர்களும் இந்த பிரச்சனையை கேள்விப்பட்ட உடன் என்னையும், சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களையும் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை, சேலம் போன்ற இடங்களில் இருந்து சுமார் 261 மருத்துவ குழுவினரை வரவழைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என கூறி உள்ளார். இங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நபருக்கும் 2 மருத்துவர், 2 செவிலியர் என நியமிக்கப்பட்டு போதுமான உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி இன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். மேலும் விரைவாக செயல்பட்டு மீதி உள்ளவர்களை காப்பாற்ற கல்லூரி டீன் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனையும் வழங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை முனைப்போடு செயல்பட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று எண்ணியதன் அடிப்படையில்தான் எஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் அமுதா, காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவல் ஆகியோரை அனுப்பி முறையான விசாரணை செய்து அறிக்கை கேட்டுள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஷசாராயம் எப்போதும் இருக்கக்கூடாது என்றும் அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு தகுதி அடிப்படையில் அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். தற்போது சிகிச்சை உள்ளவர்களை காக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* 10 பேருக்கு கண்பார்வை இழப்பு?
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை முற்றிலும் பறிபோனதாக தகவல் வௌியானது. மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் அவர்களது கண்கள் வீங்கிப்போயுள்ளது. இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘விஷசாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் சுயநினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கண் பார்வை மங்கியும் குறைந்தும் உள்ளது. அவர்களுக்கு கண் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்,’’என்றனர்.

* விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் இறுதி சடங்கில் விஷசாராயம் குடித்து பலியான சோகம்
விஷ சாராயத்துக்கு முதன்முதலாக கருணாபுரம் பிரவீன் மற்றும் அவரது உறவினரான சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் 2 பேரின் உடலும் அவர்களது வீட்டிற்கு உடல் அடக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு இருவரின் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், நண்பர்களும், பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்களில் சிலர் சோகத்தை தீர்ப்பதற்காக இறுதிச்சடங்கை முடித்துவிட்டு, அப்பகுதியிலுள்ள சுடுகாடு பகுதிக்கு சென்று சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் அவர்களும் அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொருவராக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் அடுத்தடுத்த நபர்கள் உயிரிழக்கவே அந்த பகுதியே சோகத்தில் உறைந்தது. சாவு வீட்டிற்கு வந்தவர்கள் சாராயம் குடித்ததால் உயிர்பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க காரணமாக அமைந்து விட்டதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

* கடும் நடவடிக்கை கலெக்டர் உறுதி
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தோரின் உடலுக்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் கூறுகையில், ‘கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய எஸ்பியாக பதவியேற்றுள்ள சதுர்வேதி கூறும்போது, விஷசாராய சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யார் இதை சப்ளை செய்தனர், எங்கிருந்து இதை வாங்கினர் என்பதை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

The post ஒரு பாக்கெட் சாராயம் ரூ.60: சப்ளை செய்தது எப்படி? திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Karunapuram ,Collector ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயம்: 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்