×
Saravana Stores

காற்றாலை மின் உற்பத்தி உயர்வு

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காற்றாலைகளுக்கு சாதமாக வீசுவதால் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி உயர்ந்து வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் காற்றாலை சீசன் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை இருக்கும். கடந்த மே மாதம் 1,105 மில்லியன் யூனிட், ஜூன் 19ம் தேதி வரை 1,100 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது. கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 2,400 மில்லியன் யூனிட்கள் கிடைத்தன.

தற்போதைய வானிலை முன்னறிவிப்பின்படி, வரும் மாதங்களில் இதை விட அதிக காற்றாலை மின்சாரம் கிடைக்கலாம். நேற்று முன்தினம் 62 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்தது. தென்மேற்கு காற்று வீசுவதால், சிறிய காற்றாலை மின் நிலையங்கள் கூட உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன. ​​மாநிலத்தின் மொத்த காற்றாலை மின் நிறுவல் திறன் 10,600 மெகாவாட்டாக உள்ளது. பெரும்பாலான காற்றாலைகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளன. தமிழகத்தில் இந்த காற்றாலை சீசனில் காற்று வீசும் அளவு உச்சத்தை எட்டியுள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்து வருகிறது.

மேலும் 2023-24 நிதியாண்டில், மின்வாரியத்திற்கு 12,933 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்தது. அதே நேரத்தில், 586 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையங்களும் கட்டப்பட்டன. எனவே, இந்த ஆண்டு கூடுதலாக 1,000 முதல் 1,500 மில்லியன் யூனிட் எதிர்பார்க்கலாம். கடந்த வாரம், கனமழை காரணமாக, காற்றின் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது. இருப்பினும், தற்போது காற்றாலை உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தென் மண்டல மின் ஆணையத்தின் கணிப்புப்படி வரும் நாட்களில் காற்றின் அளவு மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காற்றாலை மின் உற்பத்தி உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Electricity Board ,Tamil Nadu Power Board ,
× RELATED 70,000 புதிய மின் கம்பம் வாங்க மின்வாரியம் திட்டம்