×

பொது மாறுதல் கலந்தாய்வு உடனே நடத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை

திருவள்ளூர்: கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் இருந்ததால் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதத்திற்கு பதிலாக ஜூன் மாதம் நடத்துவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்றும், பொது மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து 2 வாரங்களாகியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்தாண்டு பதவி உயர்வு மூலமாக சென்றவர் பணியிடமும், பணி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு மூலம் சென்றவர்களினால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் காலியாக உள்ளது.

இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளியை நம்பி இருக்கும் ஏழை எளிய மாணவர்களுடைய கல்வியின் நிலை ஆசிரியர்கள் இன்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசுப் பள்ளியின் மாணவர்கள் நலன் கருதி தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களையும் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் பணியிடம் நிரப்பப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பிறகும் ஏற்படுகின்ற காலி பணியிடத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை அல்லது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் புதிய ஆசிரியர்களை ஜூன் (அ) ஜூலை மாதத்திற்குள்ளாக தேர்வுகள் நடத்தி நியமிக்க வேண்டும்.

மேலும் பள்ளி நிர்வாகத்தை சிறப்பாக நடத்திட அரசு பள்ளிகளில் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர்கள், எழுத்தர்கள், இரவு காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பணி பெரும்பாலான அரசு பள்ளிகளில் காலியாகவே இன்று வரை உள்ளது. இந்தப் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டு (2024 – 2025) முதல் ஜூன் மாதத்திலேயே தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சா.ஞானசேகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பொது மாறுதல் கலந்தாய்வு உடனே நடத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Head Teachers' Association ,Thiruvallur ,
× RELATED அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு...