×

காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்: போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து தடுத்திட அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாரய தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து தடுத்திட அதிரடி நடவடிக்கைளை மோற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுத்திடும் பொருட்டு கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் முதல் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கிராமத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்து உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் அளித்து சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தகவல் தரும் நபர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக பாதுகாத்திடவும் அனைத்து அலுவலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் மெத்தனால் பயன்படுத்தப்படுத்தும் தொழில் நிறுவனங்களையும் சால்வன்ட் உரிமம் பெற்ற நிறுவனங்களையும் கண்காணித்து அவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்துகின்றனரா அல்லது அளவிற்கு அதிகமாக பயன்படுத்துகின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணித்திடவும், பாதுகாப்பான முறையில் மெத்தனால் மற்றும் சால்வன்ட் தின்னர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்றும் அதனை பயன்படுத்தும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டு டாஸ்மாக் மேலாளர்கள் தொடர்ந்து கண்காணித்திடவும், திருவிழா, திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தொடர்ந்து கண்காணித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை எல்லை சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் போதைப்பொருட்கள் புழக்கத்தினை கண்காணித்து தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும் ஆலோசனை வழங்கப்பட்டது. கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து புகார் தெரிவிக்க பொது இடங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட தொலைபேசி எண் 94981 00260, வாட்ஸ்அப் எண் 82489 86885 ஆகிய எண்களை பொது மக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்திட வேண்டியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

வெளி மாநிலத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிய வரும் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தால் அதனை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், அளவுக்கு அதிகமாக மதுபான பாட்டில்கள் பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் நபர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மது அருந்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நபர்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி அளித்திட சுகாதாரத் துறையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி ஆணையர் (கலால்), மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருந்து கட்டுபாட்டு அலுவலர், சுகாதார அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், கல்லூரி கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்: போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து தடுத்திட அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Kanchipuram district ,Collector ,Kalachelvi Mohan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு