×

செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு; முதியோர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூரில் அரசு முதியோர் மறுவாழ்வு இல்லத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு முதியவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் முதியவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் அருண்ராஜ் உறுதியளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்கள் ஊரில் உங்களை தேடி’ என்ற திட்டத்தின்கீழ், செங்கல்பட்டு அருகே பரனூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் முதியோர் மறுவாழ்வு இல்லத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு, திடீரென ஆய்வு நடத்தினார். அந்த மறுவாழ்வு இல்லத்தில் உள்ள சமையலறையை சுத்தமாக வைத்துள்ளனரா என்று பார்வையிட்டார். பின்னர் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள வருகை பதிவேட்டை ஆய்வு நடத்தினார். அங்குள்ள மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் சரியாக வேலைக்கு வந்துள்ளனரா, விடுமுறை எடுத்தவர்கள் யார், மருந்து மாத்திரைகள் சரியாக வைத்துள்ளனரா என்பதையும் கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மறுவாழ்வு இல்லத்தில் இருந்த முதியவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா, என்ன உதவி தேவை என்பதை கலெக்டர் அருண்ராஜ் கேட்டறிந்தார். அங்கிருந்த முதியவர்கள், இந்த மறுவாழ்வு இல்லத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாடுகள் உள்ளே புகுந்துவிடுகின்றன. எங்களின் மறுவாழ்வு இல்லத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும். நாங்கள் அனைவரும் இங்கிருந்து திருமணி தொழுநோய் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்புவதற்கு வாகன வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

நாங்கள் தோட்டத்தில் வேலை செய்தால் மாதந்தோறும் ₹40 சம்பளமாக வழங்கப்படுகிறது. வேலை செய்ய முடியாதவர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹16 வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள டிவி வழங்க வேண்டும். திருமணி தொழுநோய் மையத்தில் உள்ளவர்களுக்கு புதிய செருப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, முதியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கலெக்டர் ச.அருண்ராஜ் உறுதியளித்தார். ஆய்வுக்கு வந்த கலெக்டருக்கு விரைவில் திருமணம் நடைபெற்று 16 வகை செல்வங்களுடன் வாழ்வதற்கு அங்கிருந்த வயதான மூதாட்டி வாழ்த்து தெரிவித்தார். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

The post செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு; முதியோர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Paranur Rehabilitation Home ,Chengalpattu ,District Collector ,S. Arunraj ,Baranur ,Collector ,Arunraj ,Chengalpattu… ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு...